நடந்து கொண்டிருந்த என்னை ரோட்டோரமாக வெகுவாகப் பூத்திருந்த, மலர்ந்திருந்த நீல நிற அந்த பெயர் தெரியா மலர் வெகுவாகக் கவர்ந்தது... செடியாக இல்லாமல் கொடியாகவே மண்ணில் முழுதும் பரவியிருந்தது.. இருபுறமும் ஆங்காங்கு தேங்கியிருந்த சிறு குட்டை என்றும் சொல்ல முடியாத நீர் தேக்கம் என்றும் சொல்ல முடியாத நீர்நிலைகளில் இலைகளை முழுவதும் இழந்து வெறும் மரக்கூடுகளாக இருந்த அந்த இறந்து போன மரங்களோ அதிவேகத்தில் பரதமாடிய பெண்கள் அப்படியே ஆடிய நிலையிலேயே சிலையாகி விட்டனரோ என்று எண்ணுமளவிற்கு கிளைகளைக் காற்றில் நிறுத்தி விட்டு அமைதியாகியிருந்தன...
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அவ்விடத்தில் தேங்கிய நீரின் நாற்றம் மிக மெல்லியதாக காற்றில் விரவியிருந்தது.... மனது மட்டும் பரவியிருந்த நீலப் பூக்களையே சுற்றி சுற்றி வந்தது... சிறு வயதில் தோட்டத்தில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலின் பக்கமாக ஈர நிலத்தில் அதிகமாக பூத்துக் குலுங்கும் நீல நிற டிசம்பர் பூவை அது நினைவுபடுத்தியது. என் சித்தி ஒருத்தி அந்த பூக்ளைக் கட்டி அடிக்கடி தலையில் சூடிக் கொள்வாள்... ஏனோ அவள் கூந்தலில் ஏறியதும் அதற்கு வேறொரு பரிணாமம் கொண்டு தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்ளும் அந்த பூ...
இப்பொழுது மல்லிகையைத் தவிர மற்ற பூக்களை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது..பெண்கள் பூக்களை மறந்து விட்டார்களா இல்லை பூக்கள் அவள் கூந்தலேறி தன்னை அலங்கரித்துக் கொள்ள மறந்து விட்டதா?தெரியவில்லை..
எனக்கு ஏனோ அந்த பூவைப் பறித்து அதன் வாசத்தை நுகர்ந்து விட வேண்டும் எனத் தோன்றியது... நல்ல இடமாகப் பார்த்து நன்கு விரிந்திருந்த ஒரு மலரைப் பறித்துக் கொண்டேன். மிக அருகில் பார்த்ததும் டிசம்பர் பூவிற்கும் இதற்கும் மிக அதிக வித்தியாசம் தெளிவாகப்பட்டது. டிசம்பர் பூ இதை விட சற்று அடர் நீல நிறத்தில் இடை விட இன்னும் மென்மையாக இதை விட சற்று சிறிதாகவே இருக்கும்.. இன்னும் எளிதாக எனில்... அலங்காரம் துளியும் இல்லாத இயற்கையிடம் அதிக அழகை இரவல் பெற்ற பெண்ணின் அழகு டிசம்பர் பூ... சற்று அலங்காரத்துடன் உதட்டுச்சாயம் இத்யாதிகளைப் பூசிக்கொண்டு மினுக்கும் அழகு...என் கையிலிருக்கும் பூ...
வாசம்...ஐயோ... டிசம்பர் பூவின் வாசத்தை மீட்டெடுக்க என் நியூரான்களில் எதுவும் எனக்கு உதவ மறுத்துவிட்டது.... பூவேனும் ஞாபகமிருக்கிறதே.. என் குழந்தை பூவென்றால் என்னவென்று இனி கேட்டாலும் ஆச்சர்யப்பட முடியாது போலவே...
இதன் வாசத்தை முகர்ந்து விடும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது..சற்று வேகமாக நடந்ததால் மூச்சின் வேகம் அதிகமாகவே வேகத்தைக் குறைத்து பூவின் வாசத்தை நுகருமளவு என் நடையைக் குறைத்துக் கொண்டேன்... இப்பொழுது மிக மெதுவாக பூவின் இதழ்கள் என் இரு உதடுகளையும் கவ்விக் கொள்ள அதன் மகரந்தங்கள் என் நாசிக்கு வெகு அருகில்... என்ன கொடுமை இது... இன்னும் எட்டவில்லை எனக்கு அதன் வாசம்... மாறாக காற்றில் பரவியிருந்த தேங்கிய நீரின் நாற்றம் மெதுவாக மூக்கைத் துளைத்தது...
அலுவலகமும் நெருங்கிவிடவே எப்படியேனும் அதன் வாசத்தை நுகர்ந்து விடத் துடித்தது நாசியும் மனமும்.. துணிந்தது மூளை... யுக யுகங்களுக்கு முன்பே இயற்கையிலிருந்து பிறழ்ந்து இயற்கைக்கு முற்றிலும் எதிராகி இதன் உச்சத்தை நோக்கி தாவிக் கொண்டிருக்கும் என் மனித மனம் அதைச் செய்தே விட்டது... வாடிக் கொண்டிருந்த அதன் இதழின் ஒரு சிறு பகுதியை என் விரலால் கசக்கி விரலோடு இதழையும் சேர்த்து முகர்ந்தேன்.. இதுதானடா என் பிணவாடை என்று முனகிக் கொண்டே தனதழகை முற்றிலும் இழந்து விட்டிருந்தது.. என்ன செய்வதென்று தெரியாமல் அதனை இடது கையில் ஏந்தி பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது நேரம்.. பிறகு மெதுவாக அதனைத் தூக்கி எறிந்தேன். செத்த எலி போல் சொத்தென்று ஒலி எழுப்பி நான் முற்றிலும் இறந்து விட்டேன் என எனக்கு உணர்த்தியது... வன்புணர்ந்தவனுக்கும் எனக்கும் அதிக வித்தியாசம் இல்லை....!
