இன்று ஒரு விவசாயக் கிழவன் சாகக் கிடந்தான்
என் கிராமத்தில்
தகப்பனின் தாய்மாமன்...
தாத்தன் அவனெனக்கு...
சாவு சட்டென வந்து விட வேண்டும்...
கொடுமையடா சாமி..
எட்டு வயதில்
என் தாத்தனின் சாவை அருகில் இருந்து பார்த்தேன்..
இழுத்துக் கொண்டிருந்தது..
சுற்றியும் உறவினர்கள்....
பாலூற்றிக் கொண்டிருந்தார்கள்...
என் தகப்பன் ஒருபுறம் மயங்கி விழுந்தான்..
எட்டு வயதில் எனக்கென்ன தெரியும்...
என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
வாண்டுகள் நாங்கள்...
பெரியப்பனின் சின்ன மகன் சொன்னான்...
வெங்குடு..
என் அண்ணன் அழுவான் இப்பொழுது..
சேர்ந்தழுவோம் என்று..
அந்த அண்ணனுக்கு ஒன்பது வயது..
சிரித்துக் கொண்டேன்..
பிறகு என்னையும் பாலூற்றச் சொன்னார்கள் பேரனென்று..
வெள்ளைத் துணியில் பாலை நனைத்து
ஊற்றிய பாலில்
கொஞ்சம் தொண்டையில் இறங்க
அதிகம் ஒழுகியது கடைவாயில்..
பிறகு நடந்தது ஞாபகம் இல்லை...
அவன் உயிர் போய்விட்டது...
அவனும் விவசாயக் கிழவந்தான்..
உழைத்த எவனுக்குமே உடல் கூடாய்த்தானிருக்கிறது..
இந்தக் கிழவனும் அப்படித்தானிருந்தான்..
இக்கிழவன் எனக்குக் கொஞ்சம் பிரியமானவன்..
இப்பொழுதுதான் அந்த நினைப்பே வந்தது
பிரியமானவனென்று
எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அதனால்தான் பிரியமாய்ப் போய்விட்டான் போல்..
அவன் அதட்டலும் கூட
சிரிப்பாகவே வரும்..
இன்று கலங்க வைக்கிறான்..
பச்சை கிராமம் எங்களது முன்பு
இப்பொழுது இல்லை சொல்லுமளவு..
ஏனில்லை
இதோ..
இந்த கிழவன்களைக்
காவு கொடுத்து காவு கொடுத்து
அத்தோடு பச்சையையும் காவு கொடுத்து விட்டோம்.
இல்லை..
காவு கொடுத்து காவு கொடுத்து
காவு கொடுத்து விட்டேன்...
வத்தலையும் பருத்தியையும்
மூடை மூடையாக
கு(வி)ண்டால் கு(வி)ண்டாலாக
அளப்பவன் இவனும் காயாம்புவும்..
வத்தலின் வாடையிலும் இருமலையும் சகித்துக் கொண்டு
தடித்த நூல் கயிற்றின் தராசில்
ஒருபக்கம் படிக்கல்லும்
மறுபக்கம் ஈய வாளியில்...
வத்தலும்..
எண்ணுவான் ஒவ்வொரு வாளிக்கும்...
இல்லை.. பாடுவான்...
ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு...
மூடையில் கொட்டிவிட்டு இரண்டாவது வாளியில்
ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு...
இப்படியே தொடரும்...
வாளி வாளியாய்...
ராகம்.. ராகமாய்..
இன்றோ..
ரணமாய்...
அந்த பாட்டுக்காகவே பக்கத்தில் நிற்பேன்..
போ.. ம்மையா.... போ.. ம்மையா...
இருமல் வரும் என்பான்...
கிழவன்...
இன்று இழுத்துக் கொண்டிருக்கிறான்...
சட்டென நிற்காதா மூச்சு...
அவன் செத்தபின் வந்திருக்க வேண்டும்
பாவி நான்...
எப்பொழுது போனாலும்
ஏ(ம்)வி ம்மையா... ஏ(ம்)வி ம்மையா...
என்பான் வாய் நிறைய.. அன்பொழுக..
அந்த வாயில் இன்று ஊற்றப்பட்ட
துளசிநீர் அதிகம் தொண்டைக்குள்ளும்
கொஞ்சம் கடைவாயிலும் ஒழுகியது..
மகள்கள் மூவரும் அழுது கொண்டிருந்தார்கள்
கட்டிய மனைவியும் தான்..
மூத்த மகளை பெத்த செல்லி
இடையவளை நடி செல்லி
இளையவளை சின்ன செல்லி என்பான்...
அவர்களுடனும் தோழமையே கொண்டவன்..
கிழவன்...
மகன்கள் இருவரும் துபாயில்
இன்றிரவு வந்து விடுவார்கள்..
மூத்த மகளும் மனைவியும்
அவன் புகழ் பாடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்...
கிழவன் என்ன செத்தா போய்விட்டான்..
எழுந்து ஓரம் போங்கள்...
தொண்டை வரை வந்ததை அடக்கிக் கொண்டேன்...
அம்மா என்றான்.. அய்யா என்றான்...
இடையிடையே குழறிய நாக்கில்
நாக்கு சற்றே உள் வாங்கியிருந்தது...
மூச்சு மிகுந்த சிரமத்துடன்
வயிறு மேலும் கீழும்
இடையிடையே தன்னிச்சையாக
எழுந்தமர்ந்தான்..
தொப்பென சாய்ந்தவனை
தலை தாங்கிப் பிடித்தான் என் மாமனொருவன்...
எழுந்தமர்ந்த பொழுதெல்லாம்
மனைவி கேட்டாள் தலையைத் தடவி..
என்னையா... என்னையா வேணும்..
அதட்டலாய்...
குழறலாய்ச் சொன்னான்...
தோசுகா.. தோசுகா...
மூத்த மகள் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்தாள்..
தட்டிவிடவே முயன்றான்...
மகன் வழிப் பேத்தி காலில் ஏறமுயன்றாள்...
குனிந்து முழித்துப் பார்த்தவன்...
புரிந்து கொண்டான் போல் ஒன்றரை வயது குழந்தையை
வலக் கையை மட்டும் ஆட்டினான்
குழந்தையின் முகத்திற்கு நேரே..
வேண்டாம்... வேண்டாம் என்று...
குழந்தையை சட்டென அதன் தாய் வாரிக் கொண்டாள்...
பக்கத்தில் ஒப்பாரிக்குத் தயாராயிருந்த கிழவியொருத்தி சொன்னாள்
கிழவனுக்கு தாய் தந்தை முகம்
ஞாபகம் வருமாம்
அதனால் இந்த ஆர்ப்பாட்டமாம்...
அப்படியா கிழவா?
உன்னுள் நான் வர வேண்டும்
இல்லை நானும் சாக வேண்டும்
உன்னை அறிய...
இதோ...
எழுபதுகளில் துடிக்கும்
கிழவனைக் காண
தொண்ணூறுகளில் நடமாடும் ஒரு கிழவன் வருகிறான்
கம்பையூன்றிக் கொண்டே...
அய்யா.. பாருங்கையா - மனைவி
உட்காரக்கூட இல்லை,,
கம்பூன்றி நின்று கொண்டே..
உற்றுப் பார்த்தவன்
உதிர்த்தான் சிலவற்றை..
இன்னும் நேரமாகும்
இரு வார்த்தைகளில் உதிர்த்துவிட்டு
திரும்பாமல் நடந்து சென்றுவிட்டான்
காலையில் நான் வந்தவுடன் பார்த்தபொழுது
இவ்வளவு கூட்டம் இல்லை..
மூத்த மகளும் மனைவியும் மட்டும்
அழுது கொண்டிருந்தார்கள்..
தாத்தா.. தாத்தா.. என்றேன்
மெதுவாகவும் பின்
சத்தமாகவும்
கையைப் பிடித்தேன்
பின் கன்னத்தில் தடவி
தாத்தா.. தாத்தா.. என்றேன்..
சிரமப்பட்டு மூச்சு விட்ட கிழவனிடம்
பதிலேதும் இல்லை...
பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன்
ஒருக்களித்துப் படுத்திருந்தான்
சற்று நேரம்..
மடக்கியிருந்த இடதுகை சட்டென கீழே விழுந்தது
என்னை நோக்கி..
இரையைப் பிடிக்க பம்மி
சட்டென நகரும் பல்லியாய்
இன்னும் கொஞ்சம் நீண்டது..
நான் தொடவில்லை..
ஏன் எனத் தெரியவில்லை,,,
மலவாயில் வைக்கப்பட்ட சீலையை
மனைவி சரி செய்தாள்..
சிறுநீர் கழிக்க தொப்புளுக்குக்கீழ்
துளையிடப்பட்டு சொருகப்பட்டிருந்த மஞ்சள்குழாய்
தெரியாதவாறு போர்வையைச் சரி செய்தாள்...
கிழவனின் கை சுவற்றில் உரசி உரசி புண்ணாகியிருந்தது...
இரு பத்தாண்டுகளுக்கு முன்
கிழவனின் பச்சை வயலில்...
கிழவன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்..
கிணறுகள் எதுவுமே சுற்றுச் சுவர் இல்லாமல்
மொட்டையாகத்தானிருக்கும்
ஒட்டிச் செல்லும் வாய்க்காலில்
நடக்கவே நடுநடுங்கும் எனக்கு...
ஓரமிருக்கும் பப்பாளி மரத்தில்
பழம் தேடிப் பறித்துத் தருவான்
மறக்காமல் சொல்வான்
தம்பிக்கும் குடுய்யா என்று..
அந்த கைகள்தான் இது...
போடா கிழவா..
எழுந்து வந்து விட்டேன்....
மதியத்திற்குப் பின்
பார்த்தபோது
சுவாசம் சற்று சீராகியிருந்தது...
கொஞ்ச நேரம் பார்த்து விட்டு வெளியே வந்தேன்..
ஊர் மடத்தில் அமர்ந்திருந்தேன்..
ஊர்க்காரர்களின் நல விசாரிப்புகள்
சித்தப்பன் ஒருவன் வந்தான்
பேசிக் கொண்டிருந்து விட்டு
சட்டென ஞாபகம் வந்தவனாய்க் கேட்டான்
சாப்பிட்டாயாடா என்று...
காலையில் சாப்பிட்டேன்..
இன்னும் நேரமாகவில்லை
பிறகு சாப்பிடணும்
வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக் கொண்டான்
வீட்டுத் திண்ணையில் இன்னொரு கிழவன்
சித்தப்பனின் அப்பன்...
இவனும் விவசாயக் கிழவன்
உழைப்பவன்.. உடல் கூடில்லை!
இவன் உடல் கூடாகியிருக்காது
மாறாய் இரும்பாய் இறுகியிருக்கும்..
நரம்புகள் ஆங்காங்கே புடைத்திருக்கும்
முழங்காலின் கீழ் பின்பகுதியில்
நரம்பு முடுச்சு ஒன்று
பாம்பு போல் சுருள் சுருளாயிருக்கும்
இன்னொரு திண்ணையில் வெள்ளாடு ஒன்று...
அசை போட்டுக் கொண்டிருந்தது...
மெதுவாகச் சென்று
பிடரியில் கைவைத்து அழுத்தி
நகராமல் பிடித்துக் கொண்டேன்
அது திமிரி எழுந்ததும் இன்னும் அழுத்தி
நான் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்
குதூகலம் எனக்கு..
அதன் வாயை என் வாயருகே கொண்டு வந்து
அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்பொழுதும் அசையை நிறுத்தவில்லை
திமிர் பிடித்த ஆடே
பயமில்லை உனக்கு..
ஐயோ..
பயமெதற்கு அதற்கு..
என்னை ஆடு புரிந்து கொண்டது..
நான் தான் மறந்து விட்டேன்
அதன் மொழியை..
ஆமாம்..
நானும் ஆடுகளும் பேசிக் கொள்வோம்
இளம்பிராயத்தில்
என் பிடியின் அழுத்தத்தால் சற்று இருமியது
அசை போட்டுக் கொண்டே..
பிடிதளர்த்தி கொஞ்சம் தட்டி விட்டேன்...
என் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவன்
மெதுவாய் ஆரம்பித்தான்...
கிழவன் மறைத்து வைத்திருந்த கத்தி
என் கண்ணில் படவில்லை..
எப்படா வந்த
காலையில் ரத்தினாவுக்கு தாத்தா
இப்ப எங்கடா இருக்க
ஒரிசால தாத்தா
எவ்ளோடா குடுக்குறாங்க
முப்பது ரூவா தாத்தா
இடையே உள்ளிருந்து சித்தப்பன்
டேய் மகனே வாடா சாப்பிடலாம்
இப்ப வேணாம் சித்தப்பா
கிழவன் தொடர்ந்தான்
வெளில போகலையாடா
பாத்துக்கிட்டுருக்கேன் தாத்தா
இன்னும் அமையல..
போய்ட்டுதான் வீடு கட்டணும்...
எங்க டவுண்லயாடா...
இதைக் கேட்டவன் முகத்தில் எந்த சலனுமில்லாமல் கேட்டான்
அதனால்தான் அவன் கத்தியைக்
கூர்தீட்டியதும் எனக்குத் தெரியவில்லை
ஆமாம் தாத்தா..
காடுகரையெல்லாம் பொட்டலா விட்டுட்டு போய்ட்டீங்களேடா
சிறு மௌனம்-பின்
ஆமாம் தாத்தா..
ஊரே வெறிச்சோடி இருக்கு தாத்தா
கிழவனின் கத்தி இப்பொழுது பளபளப்பாகத் தெரிந்தது
ஆனால் எந்த அவகாசமுமில்லாமல்...
போதும்டா முப்பது ரூவா...
இங்க இருடா...
ஊர்ல இளவட்ட பயலுகளே இல்லடா...’
சர்வ சாதாரணமாக
முழு வீச்சில்
கிழவனிடம் சலனமில்லாமல்
வெகு ஆழமாய் இறங்கியது கத்தி...
சொன்னவன் பதிலை எதிர்பாராமல்
வீட்டிற்குள் நடந்தான்..
கண்களில் கண்ணீர் குளம்...
பிடி சற்று இளகியதையறிந்த வெள்ளாடு
என் மடியில் முன்னங்காலை ஓங்கி அழுத்தி
திண்ணையிலிருந்து பாய்ந்து குதித்தது
ஐந்தடி தாண்டி...
புழுக்கை போட்டு விட்டு திரும்பி
நான் கண்களைத் துடைப்பதைப் பார்த்துக் கொண்டது
மெதுவாக படியேறி அந்த கிழவனின் பின்னாலேயே
வீட்டிற்குள் சென்றது
சித்தப்பன் மறுபடியும்
டேய் வாடா சாப்பிடலாம்..
நான் அந்த ஆட்டின் பின்னாலேயே சென்றேன்
வலப்புறம் இரண்டு ஆட்டுக் குட்டிகள்
இரை தின்று கொண்டிருந்தது
சித்தப்பன் ஆட்டுக் குட்டிகளை விரட்டி விட்டான்
சம்சாரி வீடுடா... என்றான்
சிரித்துக் கொண்டே..
நானும் சம்சாரிதான்
நினைத்துக் கொண்டேன்
சொல்ல வெட்கம்...
மொச்சைக்காய் குழம்பும் ரசமும்
ஒரு சட்டியில் நிறைய சாதமும்
தட்டில் பரிமாறிக் கொண்டே
எல்லாத்தையும் முடிக்கணும்டா என்றான்...
பாட்டிக்கு...
தூக்கு சட்டில கொண்டு போயிருச்சுடா..
விவசாயத்தைப் பேசிக் கொண்டே சாப்பிட்டோம்
உப்பு சற்று அதிகம்..
கிராமத்துச் சுவை வெகுநாள் கழித்து...
சாப்பிட்டு வீட்டின் முன்
ரோட்டிற்கு வந்தோம்..
இதோ
இந்த கருவேல மரங்களும்
பொட்டல் நிலமும்
கொஞ்சம் புதரும்
மண்டிக் கிடக்கிறதே...
இருபதாண்டுகளுக்கு முன்
இந்த பச்சை நிலத்தில்
நான் கிணற்று நீரில் குளித்தேன்...
குளித்த அன்றே செத்திருக்க வேண்டும்...
மறுபடியும் கிழவனைப் போய் பார்த்தேன்.
துளசி நீரின் உதவியோ என்னவோ
சுவாசம் இன்னும் கொஞ்சம் சீராகவே இருந்தது
ஈராண்டுகளுக்கு முன் செத்துப்போன
என் தாத்தன் வீட்டினுள் வந்தமர்ந்தேன்
பாட்டியினருகில்...
திண்ணையில்
என் இன்னொரு தாத்தனும் பெரியப்பனும்
தலையெல்லாமல் வெளுத்தவன்,,
செத்த என் தாத்தனுக்கு தம்பியவன்
என்பதைக் கடக்கப் போகிறவன்
உரையாடினான் உரவிலைபற்றி..
பொட்டாஷ் உரமெல்லாம் விலையேறிப் போச்சு
இனி விவசாயம் செய்ய முடியாது
இவன் வாயிலிருந்தா இந்த வார்த்தை..
அடேய்
போதுமடா கத்தி சுத்தியது
தாங்க மாட்டேன் நான்..
ஆண்டவா
என் இரு கால்களை
உன்னொரு கையால்
இறுகப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி
ஒரே அடியில் என் தலை தரை மோத
வெடித்துச் சிதற விடு...
இவ்வளவைக் கேட்ட பின்னும்
என் பாழாய்ப் போன படிப்பினை
தூக்கி எறிய மனம் வரவில்லையே..
வடிகட்டிய முட்டாளும்
சுயநலவாதியும் நான்...
இந்த கிழவன் காலையில் சொல்லியிருந்தான்
சாகக் கிடக்கும் கிழவனின் வாயிலில் அமர்ந்து கொண்டு
என் மாமன் முறையான ஒருவனிடம்
இந்த வீட்டை 1957ல் கட்டினானாம் 2700 ரூபாய்க்கு
இப்பொழுது கட்டினால் இருபது லட்சத்திற்குக் குறையாது
இந்த குக்கிராமத்தில்
உடனே மாமன் கேட்டான்
அப்போ மரம் விட்டமெல்லாம் இத்துப் போயிருக்குமே...
சளைக்காமல் சொன்னான் கிழவன்
நாகூரிலோ நாகர்கோவிலிலோ
அணாவிற்கு வாங்கினதுடா அப்போது
இன்னும் நூறு வருசத்திற்கு இருக்கும்
பெருமையுடன் சொன்னான்
அந்த கிழவன் தான் சொல்கிறான்
இனி விவசாயம் செய்ய முடியாது
ஜெர்மனிய அடிமை
நான் சொல்கிறேன்
இருடா கிழவா..
உன்னையும் காவு கொடுக்கிறேன் விரைவில்
இரவு எட்டு மணி...
கொண்டு வந்த புத்தகப்பையை
சுமந்து கொண்டு ரோட்டில் நடந்தேன்
பேருந்து நிறுத்தத்திற்கு.
இருட்டில் எங்கிருந்தோ ஓடிவந்த நாய்...
ஊளையிட்டு குரைத்துக் கொண்டே
என்னை நோக்கி ஓடி வந்தது
என்னுள் பெருங்கோபம்
நடையில் அதே வேகம்..
நாயே ஓடி விடு..
என்னை பார்த்தா குரைக்கிறாய்..
நான் பிறந்த ஊர் இது...
இருபத்தாறு ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் ஊர் இது
நேற்று பிறந்த நாய் நீ.
என்னைப் பார்த்தா குரைக்கிறாய்,,,
அதனோடு இன்னொரு நாயும் சேர்ந்து கொண்டது...
அதன்பின் நான் எதுவும் குரைக்கவில்லை
அதுகள் இப்படித்தான் குரைத்திருக்க வேண்டும்...
ஏ.. ஜெர்மானிய அடிமையே
இருபத்தாறு ஆண்டுகளாய்ச் சுமக்கும் ஊரை
என்ன மயிருக்குடா விட்டுப் போகிறாய்
நீ பிறந்த ஊரில்தான் நானும் பிறந்தேன்
அதனால்தான்
நான் உரிமையுடன் குரைக்கிறேன்...
நன்றியுள்ள நாய்களே
இன்னும் சத்தமாய்க் குரையுங்கள்..
வருகிறேன் நான்..
........................
என் ஊர்
பொட்டல் காடாயின்
என் பிணத்தை அங்கு
எரிக்க வேண்டாம்
எரியாது அது
அப்படியே விட்டு விடுங்கள்
அநாதைப் பிணமாய்...
நரிகளும் நாய்களும்
இழுத்துப் போகட்டும்
காக்கையும் பருந்தும்
கொத்தித் திண்ணட்டும்
என் ஊர்
என்னால் பசுமையாயின்-நான்
எங்கிருந்தாலும்
எங்கிறந்தாலும்
தயைகூடி என்னை எடுத்து வாருங்கள்
என் தோட்டம் போகும் வழியில்
வலப்புறம் இருக்கும் சுடுகாட்டில்
கொஞ்ச நேரம் காற்றில் அமர்த்தி
பின் எரியூட்டுங்கள்..
நரம்புகள் முறுக்கி
நான் எழுந்தால்...
வெட்டியானே, என் நண்பனே
தயைகூர்ந்து என்னை அடித்துப் படுக்க வைக்காதே
சற்று நேரம் குளிர்க்காற்றை
கடைசியாய்
ஆசையாய்
வாங்கி விட்டு
நானாய் அடங்கி விடுவேன்....
