Powered By Blogger

Saturday, November 6, 2010

என் முதல் ஸ்கூட்டர் பயணம்... !

என்னடா இவன்,எதோ ராக்கெட்டில் செவ்வாய் கிரகம் போய் வந்தது போல் அங்கலாய்க்கிறானே..என்று எண்ணினாலும் சரி.. வேலை வெட்டி இல்லையோ என நினைத்தாலும் சரி. செவ்வாய்க்குப் போய் வந்திருந்தாலும் கூட  இந்த எண்ண ஓட்டங்கள் ஏற்பட்டிருக்காது. 

இதற்கு முன்னிருந்த நிறுவனங்களில் அலுவலகத்திற்கு சக தோழர்களுடன் மகிழ்ச்சியாக அலுவலக ஊர்தியிலயே பயணப்பட்ட எனக்கு,சில காரணங்களால் அந்த வேலையை விட்டுவிட்டு, ஐந்து மாதங்களாக வேலை கிடைக்காமல் வேறுவழியின்றி இங்கு சேர்ந்த பின்  இந்த சிறு நிறுவனத்தில் ஒரு பழைய பஜாஜ் ஸ்கூட்டரை பணிக்காகக் கொடுத்திருந்தது சற்றே அயர்ச்சியையும் எரிச்சலையும் தந்திருந்தது.

இதற்குமுன் தமிழ்நாட்டில் ஸ்கூட்டர் ஓட்டிய சிலரை வெகு அரிதாகக் காணும்போது மனதிற்குள்ளாகவே கேலியாக சிரித்துக் கொள்வேன். அதெல்லாம் வயாதனவர்களுக்கான வாகனம் என்பதாக என் மனதில் ஓர் எண்ணம் படிந்திருந்தது. ஆனால் அது இப்பொழுது எனக்கு!! அது என் வீட்டு வாசலில் வந்து நிறுத்தப் பட்டபோது எதோ எருமை மாட்டை என் வீட்டில் வந்து கட்டி விட்டதாயும் அதன் மேல் அமர்ந்து பணிபுரிய செல்லும்படியும் விதிக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். 
மறுநாள் மனதே இல்லாமல் அதனை எடுத்து ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோது அதனுடைய அகலம் அதைக் கையாள சிரமம் ஏற்படுத்தியது. சாவி துவாரத்தைத் தேடி அதன் கழுத்துப் பகுதியில் சொருகி விடுவித்தபோது இரவு முழுதும் கட்டி வைத்திருந்த எருமைமாட்டை அதன் கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பி சற்றே விடுதலை கொடுத்துவிட்டதாய்ப் பட்டது.. அதன் மேல் ஏறி அமர்ந்ததும் அதுவரையில் எருமைமாடாய் என் மனதில் பதிந்துவிட்டிருந்த அந்த ஒன்று.... சற்றே பெருத்த கன்றுக்குட்டியின்மேல் அமர்ந்துவிட்டதாய்த் தோன்றியது. அடுத்து ஸ்டார்ட் செய்ய வேண்டுமே.. திரும்பி கீழே பார்த்தபோது கிக்கர் மிகவும் கீழே இருப்பதாய்ப் பட்டது. பைக்கில் ஏறி அமர்ந்ததும் உடனேயே கிக்கரை ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்யும் வசதி இதில் இல்லை.பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இருந்தும் கிக்கரை உபயோகப்பதில் திருப்தி அடைந்தவன் நான். ஆக பைக்கில் இருக்கும் சுறுசுறுப்பு இதில் இல்லாதது, இது முதியோர்களுக்கான வாகனமே என்ற என் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. என்ன செய்ய! கன்றின் மேல் அமர்ந்தவாறே கிக்கரை மிதித்தேன்.. ம்ம்ஹும்.. ஒன்று..இரண்டு..மூன்று...வாயைத் திறக்க மறுத்தது அது. அப்பொழுதாவது இறங்கி அதற்குரிய மரியாதையுடன் கையாண்டிருக்க வேண்டும்.. செய்யவில்லையே.. விளைவு... நான்காவது மிதி..ஓங்கி மிதித்ததில் சற்றே உள்வாங்கி நீட்டிக் கொண்டிருந்த ஒன்று வலது கணுக்காலின் சற்று மேலே எலும்பைப் பதம்பார்த்தது. காலுறையைக் கூட அவ்வளவாக சேதப் படுத்தாமல் மிக அழகாக தோலைக் கிழித்து விட்டிருந்தது அது. என்னுடைய ஷூவும் கூட என்னைக் காக்க மறுத்துவிட்டது எனக்கு வருத்தம்தான். இருந்தும் அதற்கு சேதம் இல்லாததால் சற்று நிம்மதி...(அதைப் பெரிதுபடுத்தாமல் மாலை வந்தே காலுறையைக் கழட்டிய போது காயத்துடன் ஒட்டிக்கொண்டு  எரிச்சலைத் தந்தது). முதன்முதலில் சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்து கால் கட்டை விரலில் ரத்தம் கொட்டிய நிகழ்வை ஏதோ ஒரு நினைவலைவரிசையில் சேமித்து வைத்திருந்த எனது மூளை அதைப் புத்துணர்வு செய்து கொண்டது.

இறங்கி கன்றுக்குட்டியை அதன் சிறிய கொம்புகளை வெகு லாவகமாக பிடித்துக் கொண்டே இருந்த இடத்தில் நிறுத்தி அதன் கழுத்து அசையா வண்ணம் அதைச் சிறைப்படுத்தி அதன் ஒரு கொம்பைப் பிடித்து ஆட்டி உறுதிப் படித்திக் கொண்டேன். அன்று பிளான்ட் செல்லும் முன் ஆய்வகம் செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்து வண்டி எடுத்துக் கொள்வதாய்த் திட்டம். ஆட்டோவைக் கேட்டால் என்பது ரூபாய் என்றான். பக்கம்தானே என்று பேருந்து இருக்கிறதா செல்வதற்கு என்று அவனிடம் கேட்டேன்.. அந்த பேருந்தில் ஏறிக் கொள்ளுங்கள் என்று அவன் கை காட்டிய இடத்தில் பேருந்து நின்று கொண்டிருந்ததில் மிகுந்த ஆச்சர்யம் எனக்கு... பின்னே..நமது ஊரைப் போல்  பேருந்துகள் அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருக்கும் இங்கு(சட்டீஸ்கர்) உடனேயே பேருந்து கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. ஓடிப் போய் ஏறி அமர்ந்து கொண்டேன்..அலுவலகத்தை அடைந்து வண்டிக்குக் காத்திருந்த போது கொஞ்சம் ஸ்கூட்டர்களையும்(அதை ஓட்டியவர்களும் வயதானவர்களாகவே இருந்தனர்).. ஆய்வகத்திற்குச் செல்லும்போது அதைவிட அதிகமான எருமைமாடுகளும் என் வழியை மறித்துக் கொண்டு சாலையைக் கடந்து சென்றன நிஜமாகவே..

மாலை அறை நண்பன் வந்ததும் அவன் தன் பங்கிற்கு ஒருபக்கம் சாய்த்து இன்னபிற சம்பிரதாயங்களைச் செய்து மிதித்த ஒரே மிதியில் உர்ர்ர் என உறுமியது... எனக்கு கோபம்.. நான் சொல்லிக் கேட்கவில்லையே என்று. சிறிதுநேரம் அலறவைத்த அவன் அணைத்துவிட்டு திரும்ப மிதிக்க, ம்ம்ஹூம்.. அசையவில்லையே.(சிறிதே நிம்மதி எனக்கு, அவன் சொல்லியும் கேட்கவில்லை என்பதால்).சிறிது நேரம் முயன்ற அவன் களைப்படைந்தவனாய் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என வந்துவிட்டான். இடையில் இன்னொருவன் சிறுவயதில் தன்னுடைய தந்தை,அம்மா மற்றும் தங்கையுடன் ஸ்கூட்டரில் பயணம் செய்ததாகவும் அது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் சிலாகிக்க அதற்கு இன்னொருவன், அப்படியானால் அண்ணனிடம் இந்த ஸ்கூட்டரை வாங்கி உன் ஸ்ருதியை ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விட்டு வா என்றதும் ஏற்பட்ட சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன்.

இப்படியாக முதல்நாள் முடிந்துவிட்ட நிலையில் மறுநாள் நண்பன் சென்றதும் திரும்பவும் அவஸ்தையாய்(என்ன செய்ய,அதைப் பார்த்தவுடன் உற்சாகம் போய் விடுகிறது எனக்கு) விடுவித்து நேற்றுபோல் ஏறி அமர்ந்ததும் காலைக் கிழித்தது ஞாபகம் வந்தது. இடதுபுறமாய் ஏறிய நான் வலதுபுறமாய் இறங்கி(சிறுவயதில் பச்சைக் குதிரை விளையாடிய ஞாபகம் வந்தது) மிகுந்த பக்தியுடன் மிதித்தேன்.வலதுபுறமாய் நின்று இடதுகாலால் மிதிக்க சற்று கடினமாகாத்தான் இருந்தது. எங்கே கீழே விழுந்திடுமோ என்ற பயம் வேறு. இன்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அலுவலகத்தில் தெரிவிக்க ஒரு மணி நேரம் கழித்து இருவர் வந்தனர். இருவருமே சற்றே வயதில் மூத்த அலுவலக வாகன ஓட்டுனர்கள்.. எனக்கு சங்கடமாகி விட்டது இவர்களை அனுப்பியிருக்கிறார்களே என்று. ஒருவர் என் நண்பன் நேற்று செய்ததைப் போலவே சாய்த்து சம்பிரதாயம் செய்து மிதித்த ஒரு மிதியில் வாயைத் திறந்து கொண்டது. வெகு நாட்கள் பழக்கம் போலும் இருவருக்கும். முதல் பிரச்சினை பெட்ரோலைத் திறந்து விடவில்லை என்றதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல் நான் நேற்றிலிருந்து முயற்சிக்கிறேன்.. ஸ்டார்ட் ஆகவில்லை என்று திணறினேன்...எனக்கு சற்று வெட்கமாக இருந்தாலும் நேற்று என் நண்பனும் இச்சம்பிரதாயங்களைச் செய்தும் அவனது பேச்சையும் கேட்க மறுத்ததை எண்ணி சற்று ஆறுதலடைந்தேன். ஓட்டி பார்த்து விட்டு தருகிறேன் என்றதும் வாசலை எட்டி கம்பிக்கதவைத் திறந்து ஏற்கனவே எப்படியோ உள்ளே புகுந்த பசுவை வெளியே விரட்டி அவருக்கு வழி அமைப்பதில் முனைந்தேன். என்னைக் கண்டதும் மிரண்டு ஓடிய பசு, ஸ்கூட்டர் அருகில் வந்ததும் ஏனோ திரும்பி அதன் முகப்பை அப்படியே முகர்ந்து பார்த்துக் கொண்டு நின்று விட்டது. எனக்கு ஆச்சர்யமும் சந்தோசமும்..என்னைப் போலவே பசுவும் அதைக் கன்றுக்குட்டி என நினைத்து விட்டதோ என்று.விரட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே நின்று விட்டேன். ஓட்டுனர் விரட்டி சற்றே பின் வாங்கிய பசுவை அதன் கால்களில் இடித்து மேலும் துரிதப்படுத்தினார். மனதிற்குள் திட்டிக் கொண்டேன். 

ஓட்டி விட்டு தந்தவர் நான் ஏறி அமர்ந்ததும் அமைதியானது.என்னைப் பிடிக்கவில்லை போலும். சரி நீங்கள் ஓட்டிப் பார்த்து விட்டு சொல்லுங்கள்,ஏதும் பிரச்சினை எனில் வண்டியைக் கொடுத்து விட்டு அவருடன் செல்லுங்கள், வண்டி ரயில்வே க்ராசிங்கின் மறுமுனையில் உள்ளது என்றவரிடம் விடை பெற்று அவரது சிற்றுந்தை நோக்கி செலுத்தினேன். சிறிது தூரத்தில் சிக்னலை அடைந்து வேகத்தைக் குறைத்ததும் அமைதியானது மறுபடியும்.இறங்கி திரும்பவும் மிதித்து கிளப்பி ரயில்வே கிராசிங் வரும்போது கதவைப் பூட்டியிருந்தார்கள் ரயில் கடந்து கொண்டிருந்ததால். நிறுத்துவதற்கு வேகத்தைக் குறைத்த எனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட விதமாக அதுவாகவே அமைதியானது. ஏற்கனவே இந்த வேலைப் பிடிக்காமல் இருந்த எனக்கு இந்த சம்பவங்கள் அனைத்தும் எரிச்சலூட்டி சீக்கிரம் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என நினைக்கத் தூண்டியது. ரயில வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க பின்னால் இருவரும் வந்து என்ன சார் வண்டி எப்படி இருக்கு என்றனர். வேகம் குறைந்தவுடன் அதுவாகவே நின்று விடுகிறது. நீங்கள் சரி செய்து கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டேன்.அவரும் சரியென்று கார்ப்பரேட்டரை சுத்தம் செய்தால் சரியாகிவிடும் என்றபடி எடுத்து சென்றதும் நான் இன்னொருவருடன் பிளாண்டிற்குள் வந்து விட்டேன். 

மாலை 3 மணியளவில் அழைத்தவர் சார் வண்டி சரியாகி விட்டது. வீட்டில் விட்டு விடவா என்றதும் சரி என்று வைத்து விட்டேன், இவ்வளவு சீக்கிரம் எப்படி முடிந்தது என்று எண்ணியவாறே.

மாலை வந்து அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு பிடித்திருந்தால் எடுத்து ஓட்டிப் பார்த்திருப்பேன். மனதிற்குப் பிடிக்காத ஒன்றைக் கண்டுகொள்ளாதது இயல்புதானே.அதுவும் என்னைப் பிடிக்காதது போல் அந்த பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டது. மறுநாள் காலை என் நண்பன் சென்று விட்ட பிறகு பச்சைக் குதிரை தாண்டி சம்பிரதாயம் முடித்து இரண்டாவது மிதியில் எடுத்து விட்டேன். திணறியபடியே ஓட்டி சிக்னலை அடைந்ததும் பழையபடியே அதுவாக அமைதியானது. பொய் சொல்லி நேற்று என்னிடம் கொடுத்து விட்டான் என நினைக்கிறேன். அதைப் பற்றி அலுவலகத்திலும் புகாரோ ஏதும் நான் தெரியப் படுத்திக் கொள்ளவும் இல்லை. என் விதியைத்தான் நொந்து கொண்டேன். இல்லையென்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வருவேனா! விவேக்கின் பாணியில் எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சிக்னல் விழுந்து பின்னால் இருந்த குதிரைகளும் இன்னபிற வாகனங்களும் என் கன்றுக் குட்டியை அகற்றும்படியாக கதறின.நானும் அவசரமாக இறங்கி ஸ்டார்ட் செய்து ரயில்வே கிராசிங் கடந்து வேகத்தடையில் அணைந்துவிடக் கூடாதே என்று மிக கவனமாய் சென்று கொண்டிருக்க, சைக்கிளில் முன்னாள் அமர்ந்திருந்த ஐந்து ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன்  என்னைப் பார்ப்பதாக எண்ணி சிரிக்க எத்தனித்தபோது அவனது பார்வை என் ஸ்கூட்டரின் மேல் நிலைபெற்றுருப்பதை உணர்ந்தேன். என் புன்னகை அதுவாகவே அணைந்து விட்டது.அவன் அப்படியே என்னை நோக்கி திருப்பிய பார்வை ஏதோ வெளியில் போய்த் திரும்பிய தந்தை தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாரோ  என்று ஆவலாய்ப் பார்ப்பதாய் உணர்ந்தேன். அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது என்று வடிவேலு பாணியை மனதில் நினைத்தக் கொண்டேன். 

சிறிது வேகத்தைக் கூட்டியதும் வண்டியில் ஏற்பட்ட உதறல், என் வீட்டில் இருக்கும் நிஜமான காளைக் கன்றை இழுத்துக் கட்டுவதை விடவும் கடினமாக இருந்ததால் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். ஒருவழியாக நான் பிளாண்டிற்குள் நுழைவதற்கு முன் வழியில் கிட்டத்தட்ட பத்து முறைகளாவது நின்றுவிட்டிருந்தது. சோர்ந்து போய் இறங்கி கையைப் பார்த்தபோது இடது கையில் வண்டியில் ஊற்றப்பட்ட எண்ணெய் ஒட்டிக் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் யாரிடமும் கூறாமல் இந்த மாதத்துடன் வேலையை விட்டுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்... அன்றோடு வேலைக்குச் சேர்ந்து பத்து நாள் முடிவடைந்திருந்த நிலையில்...

மரங்கள் என்னை மதிப்பதில்லை....

                              

                      அன்று மதிய உணவிற்கு சற்று முன் அவசர வேலை காரணமாக தொழில் நிமித்தம் கதிரியக்கத் துறை நண்பர் ஒருவரைச் சந்தித்து விட்டு நண்பனின் மோட்டார் சைக்கிளில் நாங்கள் பணிபுரியும் இடத்திற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தோம் மரங்களின் ஊடாகக் குளுமையுடன்... நான் பின்னால் அமர்ந்திருந்ததால் அண்ணாந்தும் பக்கவாட்டில் திரும்பியும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன்.... ஆந்தை தன் தலையை எனக்குக் கொடுத்திருக்குமாயின் 360 டிகிரியிலும் சுழட்டிக் கொண்டிருப்பேன்..அமையவில்லை... வழியில் வண்டி பஞ்சர்... சரி பார்க்க அவன் ப்ளாண்டின் வெளியே செல்ல ஏழெட்டு கிலோ மீட்டரும் எனது பணியிடம் செல்ல ஒன்றரைக் கிலோமீட்டரும் பயணம் செய்ய வேண்டும்... அவன் சென்று விட நான் இன்னொருவனுக்கு அலைபேசியில் அழைத்த போது அங்கு சாப்பிடுவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. அவனை அழைக்காமல் நடப்பதென முடிவெடுத்தேன் மரங்களின் குளுமையுடனும் ஆலையின் தூசுக்களினூடேயும்..அங்கு பணிக்குச் சேர்ந்து இருவார காலமான நிலையில் பணிதான் பிடிக்கவில்லையே தவிர திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் அடர்ந்திருந்தது ஒருவித குதூகலத்தை எனக்குள் உருவாக்கி இருந்தது. ஏனெனில் இதற்கு முன் பணிபுரிந்த இரு நிறுவனங்களிலுமே பணியிடம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்... அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாலே சுட்டெரிக்கும் வெயில்..குஜாராத்திலாவது பராவாயில்லை.. அரபு நாட்டில் பணிபுரியும்போது தனது தாகத்தைத் தீர்க்க எங்களது உயிரை உறிஞ்சும் வெயில்.. ஒரு மரத்தையோ செடியையோ கண்ணில் பார்க்க முடியாது..இதனாலேயே பல நேரம் அலுவல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுண்டு..போதாதற்கு மதிய வேலையில் எப்பொழுதாவது  வெயிலுடன் கூடிய காற்றில் சிக்கினால்..... இரண்டு நாட்களுக்கு நமது பாடு திண்டாட்டம்தான்.. தமிழ் அன்பர்களுக்கு இதைப் பற்றி விளக்கத் தேவையில்லை. பெரும்பாலான தமிழர்கள் தங்களின் குடும்ப தாகத்தைத் தீர்க்க அங்குதானே உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இப்படியிருந்த எனக்கு இங்கு இவ்வளவு அதுவும் அடர்ந்த மரங்களைக் கண்டதும் போகும்போது வரும்போதும் முதலில் சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனால் மற்ற இடத்தை விட மிதமிஞ்சிய வகையில் காற்றில் தூசுக்கள்... வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தேன்... பசித்ததால் வழியில் உணவகம் இருக்கிறதா என பார்த்தும் கேட்டும் கொண்டே.. மிகப் பெரிய ஆலை என்பதால் பல இடங்களில் உணவகங்கள் இருந்தன.. அது ஒரு ஆலை என்பதே என் மனதில் இருந்து மறைந்ததற்காக பல காரணங்களை அடுக்கலாம்.. வழியில் ஒரு பெட்டிக்கடையில்!!! கேட்ட பொழுது நேராக சென்று வலப்பக்கம் என்றார். அந்தக் கடையின் முன் பெரியவர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்... ஒரு மர நிழலில் படுத்திருந்தார் என சொன்னால் அது அந்த வனாந்திரத்தில்?! இருக்கும் ஒட்டுமொத்த மரங்களையும் அவமதிப்பதாகும்.. ஏனெனில் அங்கு என்னை வெளியில் வரமுடியாமல் சுட்டெரித்த ஆதவன் இங்கு என் காலடி தொடுவதற்கு மன்றாடிக் கொண்டிருந்தான் மரங்களிடம். இவ்வளவு மரங்கள் இருந்தும் என்னைப் பாதித்த விடயம் அவற்றில் ஒன்று கூட என்னிடம் பேசவில்லை என்பதுதான்.. பேச்சு.. வேண்டாம்.. ஒரு புன்னகை...இல்லையே... சரி என்னிடம் வேண்டாம்... அவைகளுக்குள்ளாகவும் கூட அவை பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவற்றின் மீது தூசி படிந்து அவற்றை பொலிவில்லாமல் ஆக்கியிருந்தன.. ஓடி விளையாடும் குறும்புக் குழந்தை எதிர்பார்த்த ஒன்று கிடைக்காததால் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டது போலிருந்தது அவைகளைக் காணும்போது..

சற்றுதூரம் நடந்ததும் வலப்பக்கம் ஒற்றையடிப்பாதை ஒன்று பிரிந்தது. நான் இந்த காட்டிற்குள் என்ன இது ஒற்றையடிப் பாதை என்று எட்டிப் பார்த்துவிட்டு இறங்காமல் இடப்பக்கம் எழும்பியிருந்த கட்டடத்தில் ஒரு நொடி பார்வையை நிறுத்தி ஆளரவமற்ற அந்த இடத்தில் நேராக நடந்து கொண்டிருந்தேன்.. திடீரென்று கூவென்று நீண்டது ரயிலின் சத்தம் எனக்குப் பின்னால்.. ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்போதே சில நொடிகள் கழிந்து என் வலப்பக்கம் எனக்கு இணையாக அந்த மரங்களின் இலைகளின் தழுவல்களுக்கு ஊடே ரயில் சென்றது மெதுவாக... ரயில் தளவாடத்தில் பயணம் செய்யாமல் மரங்களின் மடிகளில் ஊர்ந்து செல்வதாகவே பட்டது எனக்கு. குழந்தையை வேண்டுமென்றே முறைத்து அது வாய் கோணி அழ முற்படும் வேலையில் பேஏஏ.... என்று சிரித்து அதன் மெல்லிய இதழில் பூக்கும் புன்னகைப் பூவை ரசிப்பது போல், மரமும் அந்த ரயிலை தன் கிளைகளுக்குள் ஒளித்து வைத்து திடீரென என் கண்முன் காட்டி என்னை மிரளவைத்து அது சிரித்துக் கொள்ள விழைகிறது என எண்ணியவாறே அதை ஏறெடுத்துப் பார்த்தபோது எனக்குதான் ஏமாற்றம். அது எப்பவும் போல் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டுதான் இருந்தது, நான் அதை முறைத்து விட்டு திரும்ப பின்னோக்கி வந்து அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன்.. சில மீட்டர்கள் சென்று ரயில் தடவாளம் கடந்தபோதுதான் தெரிந்தது அந்த பக்கம் இருக்கும் கட்டிடங்கள்.

அதற்குள் வயிறும் உணவு வேண்டும் என பசித்துணர்த்தவே சற்று வேக நடையில் உணவகம் சென்றேன்.. அங்கிருக்கும் எல்லா உணவகங்களுமே ஒரு சிறிய கல்யாண மண்டபம் போல் பெருத்திருந்தாலும் பராமரிப்பு அவ்வளவாக இன்றி அரசாங்கக் கட்டிடம் என்ற முத்திரையை பதித்துக் கொண்டிருந்தது.படியேறி வாசலைத் தொட்ட போது என்னை வரவேற்காமல் பாதி உடலை வெளியிலும் தலையை உள் பக்கம் நீட்டியவாறு கண்களை ஒரு இடத்தில் பதித்திருந்தது ஒரு பசு.. தினமும் வரும் விருந்தினர் போல.. யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.. அதுவும் யாரையும் கண்டுகொள்ளவில்லை..அதனைத் தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்று விட்டு அதன் கண்கள் எங்கு நிலைத்திருக்கிறது என்று பார்த்த பொழுது என்னால் சரிவரக் கணிக்கமுடியவில்லை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதாவது கொடுத்தால் கொடுங்கள்.. இல்லையென்றால் நடையைக் கட்டுகிறேன் என்று யாரையும் கோபிக்காமல் மிகவும் சாந்தமாக இருந்தது அதன் பார்வை.. உள்ளே சென்று சாப்பாடு இருக்கிறதா என்றேன். இல்லை சமோசாதான் இருக்கிறது என்றான்.மணி ஒன்றுதானே ஆகிறது.அதற்குள் தீர்ந்து விட்டதா என்று எண்ணியவாறே அவனிடம் எதுவும் கேட்கவும் விரும்பாமல் என் வீட்டில் சாப்பிடுவதை நினைத்துக் கொண்டேன்.மதிய வேளையில் அம்மா ஊற்றும் சாம்பாரையும் அதனுடன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவதும்... இங்கு எனக்கு சமோசா இருக்கிறது என்கிறான். அதெல்லாம் எம்மாத்திரமடா.. வாசலை அடைந்தபோது அந்த பசு அந்த இடத்தை விட்டு அசையாமல் கண்கள் கூட அதே நிலையில் சிலையோ என்று எண்ணும் விதம் அப்படியே நின்று கொண்டிருந்தது. எனக்கு பாவமாக இருந்தது.உனக்கு இங்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காதுடா என்று நினைத்தவாறே அதன் முதுகில் என் விரல்களால் தடவியபோது.... என் மென்மையான விரல்கள் அந்த முரட்டுத் தோலில் பட்டபோது அது சிலிர்த்துக் கொண்டதா இல்லை.. எனைத் தொந்தரவு செய்யாதே என்று தோலை சிலுப்பிக் கொண்டதா தெரியவில்லை..அப்பொழுதும் கூட அது என்னைக் கண்களை மட்டும் கூட திருப்பி பார்க்கவில்லை.இறங்கி வெளியில் வந்தேன். இவ்வளவு மரங்கள் இருந்தும் இடையில் செடிகள்
மண்டி இருந்தும் அங்கெல்லாம் பசியாற்றிக் கொள்ளாமல் இங்கு வந்து சமோசாவிற்காக நிற்கிறதென்றால்... அடப்பாவமே... எதுவுமே அது சாப்பிடும்படி இல்லையா! அந்த அளவிற்கா மோசமாயிருக்கிறது... நான் அந்த ஆலைக்குள் வேறு சில குறிப்பிட்ட இடங்களைக் கடக்கும்போது தூசுகள் கலந்த ஒரு நெடி(மோசமான நாற்றம் எதுவும் இல்லை) எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. எனக்கும் ஐந்து அறிவையோ இல்லை அந்த பசுவிற்கு ஆறாம் அறிவையோ கொடுத்திருந்தால் நானும் அதுவும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்திருப்போம்..
கொடிய விலங்குகள் என்கிறோம்.. உண்மையிலேயே மிகக் கொடிய விலங்கு மனிதன் தான். காட்டு விலங்குகளுக்கு தற்பாதுகாப்புக்குக் கூறிய நகங்களையும் கொம்பு போன்றவைகளையும் படைத்தவன் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற மிக மிகக் கொடிய ஆயுதத்தைப் படைத்து விட்டான்.அது இருப்பதால்தானே சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். காட்டு மிருகங்களும் கூட "அறிவில்லாததால்" அதன் பசிக்கும் தற்பாதுகாப்புக்கும் மட்டுமே மற்றவற்றைத் தொந்தரவு செய்யும். மனிதன் உள்ளே நுழையும்போது அவற்றில் பலவற்றை வேட்டையாடியிருப்பான். சில முடிந்தமட்டும் எதிர்த்து பின் ஓடி ஒவ்வொன்றாக செத்து விழுந்திருக்கும்.நாம் அறிவும் சிந்திக்கும் தன்மையும் கொண்ட மனிதர்களாயிற்றே.அது நமக்கு தேவையில்லை.

நான் அந்த ஆலையில் இரு வாரங்களுக்கு முன் முதன் முதன் முதலாக நுழையும்போது மரங்களைக் கண்டு வியந்த வியப்பு... ஆகா இவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்களே என்ற பெருமிதம் வெகு சில நாட்களிலேயே ஒழிந்து போனது. நான் நினைத்ததற்கு மாறாக, இங்கு ஒரு ம....ரத்தையும் நடவில்லை.. இருப்பதைப் பிடுங்கி ஊடே தார்ச்சாலைகளையும் ரயில் தளவாடங்களையும் பெரிய கட்டிடங்களையும் எழுப்பி மிகப்பெரிய ஆலையை உருவாக்கியிருந்தார்கள் என்ற உண்மை என் மர மண்டையில் ஏற சில நாட்கள் ஆயின. யோசித்துக் கொண்டே நடக்கையில் பசி ஒருவித களைப்பை உருவாக்கியிருந்தது.தலையில் இருந்த தலைக் கவசமும் கண் கண்ணாடியும், காலின் ஷூக்களும் இன் செய்த சட்டையும் அவஸ்தையாகவே தெரிந்தன. ஏனோ ஊரில் நண்பர்களுடன் வேப்ப மரங்களின் நிழலில் கைலியையும் சட்டையையும் கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடியது நினைவிற்கு வந்தது. எல்லவற்றையும் கழட்டி எறிந்து ஒரு லுங்கியையும் சட்டையையும் போட்டுக் கொண்டு அங்கு பூராவும் சுற்ற வேண்டும் போல் தோன்றியது.அவஸ்தை மேலும் அதிகரிக்க அப்பொழுது கழட்ட முடிந்த தலைக் கவசத்தையும் கண்ணாடியையும் மட்டும் கழட்டிக் கொண்டேன். கண்ணாடியைக் கழட்டியதும் தூரத்தில் அழுக்காய் இருந்த மரங்கள் இன்னும் மங்கலாய்த் தெரியவே மீண்டும் அதை போட்டுக் கொண்டேன்.
உள்ளே சிறிய பூங்காக்களை அமைத்திருந்தார்கள்..சில இடங்களில் செயற்கையாகவும் சில இடங்களில் இயற்கையாகவும்.. சில இடங்களில் இயற்கையாகவே வளர்ந்த மரங்களைச் சுற்றி வேலியிட்டு அதனைப் பூங்காவாக்கியிருந்தார்கள். அதுனூடே இருந்த வெவ்வேறு உயரங்களில் இருந்த புற்களும் சிறிய புதர்களும் அவை இயற்கை என்பதைக் காட்டியது.என் கைகளாலேயே அந்த வேலிகளை பிய்த்து எறிந்து ஓடிவிடுங்கள் ஓடிவிடுங்கள் என்று அந்த மரங்களைப் பார்த்துக் கத்த வேண்டும் போலிருந்தது. செயற்கையாய் அமைத்த பூங்காக்களில் ஒழுங்காய் வெட்டப்பட்டிருந்த புற்களையும் குள்ளமாய் உருண்டையாய் இருந்த செடிகளையும் கண்டபோது குழந்தைகளை அலங்கரித்து ஏதொவொரு அணிவகுப்பிற்கு தயார்படுத்தப்பட்டதைப் போலிருந்தன. என்னை விட சற்று உயர்ந்து வளர்ந்திருந்த சில மரங்கள் வரிசையாய் நின்றது, இளங்குமரிகள் நடன ஒத்திகை முடித்து பார்வையாளர்கள் முன் சற்றே பதற்றத்துடன் நடனத்தைத் துவக்கும் விதமாய் நின்றுகொண்டிருப்பதைப் போலிருந்தது. அவற்றில் மஞ்சள் பூக்களைத் தலையில் சூடி அவற்றை வழி நடத்திக் கொண்டிருந்த முதிர் கன்னிகளும் அடக்கம்.

இப்படியாகப் போகும்போதும் வரும்போதும் என்னுடன் பேசாமலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டே செல்வேன்.. வேதிப் பொருட்களையும் வாயுக்களையும் சுமந்து செல்லும் குழாய்களுக்கிடையிலும் சில இடங்களில் மரத்தின் கிளைகளும் கொடிகளும் புகுந்து அவைகளுடன் உறவாடிக்கொண்டிருந்தன. அந்த இரும்புக் குழாய்களும் கூட தங்களையும் இந்த மரத்தின் கிளைகளாய் பாவித்துக் கொண்டு உயிரோட்டத்துடன் காணப்பட்டது... அவற்றிற்கெல்லாம் உயிர் கொடுத்த அந்த மரங்கள் எந்த உணர்ச்சியும் சலசலப்புமின்றி சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

இப்படியான ஒரு நாளில் சற்று முன்கூட்டியே சென்று விட்டதால் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..காலை வேலையில் மரங்கள் பக்கத்தில் இயற்கையாகவே இருந்த குளுமையைத் தாண்டி அங்கு திரவ நிலையில் சேமித்து வைக்கப் பட்டிருந்த ஆக்சிஜன் டாங்குகள் அந்த இடத்தைக் கடக்கும்போது இன்னும் குளுமையைக் கூட்டின.

அவ்வளவு மரங்கள் இருந்தும் நான் இதுவரையிலும் ஒரு பறவையையோ அதன் குரலையோ கேட்காதது மிகப் பெரிய ஏமாற்றம். அறிவற்றவை என்று நம்மால் அறியப்பட்டவைகள் கூட நினைத்த மாத்திரத்தில் முடிவெடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.தமக்கு ஒவ்வாது என்றதும் உடனடியாய் வேறு இடத்திற்குக் காலி செய்து கொள்கின்றன.

ஒரே ஒரு நாள் சில தட்டான்களை மட்டும் கண்டிருந்தேன். மெதுவாக நடந்தவாறே முடிவாக இருந்த பெரிய சுவரின் பக்கம் நடந்தேன்.அங்கு இருந்த சற்றே உயர்ந்த மரங்கள் மட்டும் சலசலத்து தங்களுக்குள் சம்பாஷனையில் ஈடுப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு சற்றே ஆச்சர்யம் இவை தனிக் கட்சியோ என்று. ஆனால் அவையும் கூட என்னைப் பார்த்ததே ஒழிய எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் தனியாக உலாவுவதைப் பார்த்து விட்டு உடன் பணிபுரியும் நண்பனும் சேர்ந்து கொண்டான்.அவன் அவ்வூரைச் சேர்ந்தவன். அந்த பக்கம் என்ன இருக்கிறது எனக் கேட்டதற்கு ஒன்றும் இல்லை.. இன்னும் ஆலையை விரிவாக்கப் போகிறார்கள் என்றான்.அந்த பக்கம் பார்ப்பது என்ற முடிவில் அங்கு புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த நீரைக் குளிர்விக்கும் நிலையத்தின் (Cooling Tower) ஐந்து அடுக்குக் கட்டிடத்தில் ஏறினோம். முதலில் அதன் உச்சியில் கான்க்ரீட்டால் மறைத்து வடிவமைக்கப் பட்டிருந்த ஐந்து மீட்டருக்கும் அதிகமான ஆரம் கொண்ட, நீரின் வெப்பத்தை இழுத்து மேலே அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த காற்றாடியின் இறக்கைக்குள் மெதுவாக தலையை நுழைத்து அதனைத் தடவிப்பார்த்தேன்.என்னவெல்லாமோ தோன்றியது.திடீரென்று அது சுழல ஆரம்பித்தால் அதன் இறக்கையைப் பற்றிக் கொண்டு நானும் சுழல்வதைப் போலும் இல்லை எனது உடல் இரண்டாகி நீரின் ஆவியோடு ஆவியாய் எனது ஆவியையும் மேலே பறக்க விடுவதுமாய்த் தோன்றியது. வெளியே வந்து பக்கவாட்டில் அடுத்த கட்டிடத்தில் ஏறி ஆலையின் பின்புறம் பார்த்தபோது மலைத்துத்தான் போனேன்.இடதுபுறம் மிகப் பெரிய ஏரி, நீல நிறத்தில் தண்ணீரை தன் முழுதும் நிரப்பிக் கொண்டு ரம்மியமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நீலம்தான் என்று சொல்ல வாய்ப்பளிக்காமல் கண்ணுக்கெட்டிய கடைசி புள்ளியில் பசுமை சற்று மங்கலாகவே தெரிந்தது. தங்களுக்குள் சம்பாஷித்துக் கொண்டிருந்த மரங்கள் இப்பொழுது கலகலவென சிரித்துப் பேசத் துவங்கியிருந்தன. நான் ஏரியைப் பார்ப்பதை கவனித்துவிட்ட அந்த ஒரு மரம் என் மீது பார்வையை சிறிது நேரம் நிறுத்தி திரும்பவும் தன் வேலையைப் பார்க்கத் துவங்கியிருந்தது. கடந்து செல்லும் மங்கையின் கடைக்கண் பார்வை பெற்றுவிட்ட புன்னகையுடன் நான்.
அப்படியே வலதுபுறம் பார்வையைத்திருப்ப அதற்கு நேர் எதிராய் ஆலையின் கழிவுகளை அளவுக்கதிகமாய் ஏராளமான புகைக்கக்கிகள்(புகைப்போக்கிகள் என்பது வீரியத்தைச் சற்று குறைப்பதாய்ப் படுகிறது எனக்கு) கக்கிக் கொண்டிருந்தன. நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிகரிக்க நம் வாழ்நாளை குறைத்துக் கொள்கிறோம்.

இறங்கி வரும்பொழுது ஒரு அரக்கு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று என் கண்ணில் பட்டு விட்டுச் சென்றது. மனிதன்... பசு மாடு... தட்டான்..இவற்றையடுத்து அந்த வனத்தில்(ஆலை தான்)நான் கண்டுகொண்ட நடமாடும் உயிரினம்.. நினைவுக்கு வந்தது.... வண்ணத்துப்பூச்சியையும் கண்களால் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே...வந்து இருக்கையில் அமர்ந்தபோது அரக்கு நிற வண்ணத்துபூச்சி திரும்பவும் என்னைச் சுற்றி சுற்றி வந்தது.முகத்திற்கு அருகே வந்து பறந்து விட்டு சற்று தள்ளி ஒரு சுற்று சுற்றி சென்றது. ஒரு வேளை அந்த மரம் எதாவது சேதி சொல்லி அனுப்பியிருக்குமோ? வாழ்த்து சொல்லியிருக்குமோ? எனக்கு எதற்கு வாழ்த்து?வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன உயிரற்ற பொம்மைகளா? பெரிய இவனாட்டம் உலா வந்து போகிறாய்? போடா... என்று திட்டியிருக்கும்.. ஆனால் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது எதுவும் சொல்லவில்லையே. முகத்தைத் திருப்பிக் கொண்டதே...
நாம்தான் அவைகளைப் புரிந்து கொள்ளவில்லை...அவைகள் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன..உணர்ந்து கொண்டுள்ளன.இல்லையென்றால் இவ்வளவு கொடுமைப் படுத்தும்பொழுதும் அதற்கான கடமைகளைச் செவ்வனே செய்து நமக்கு உதவியாய் இருந்து கொண்டிருக்குமா? ஆறறிவு நமக்கு.. மற்றதற்கெல்லாம் குறைவு என்று நாமாக நிர்ணயித்துக் கொண்டோம்.நல்லவேளை நமக்கிருக்கும் சிந்திக்கும் சக்தி அவற்றிற்கில்லை.இருந்திருந்தால் மனித இனம், மற்ற இனம் என்று போராடி மனித இனமே இருந்திருக்காது இன்று... என்றெல்லாம் சிந்தனை அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் பாடத்தின் ஊடே மரங்களுக்கு மட்டும் வாயிருந்தால் வரலாற்றை அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தான் பள்ளிக்கு வரும்போது நூறு வயதிற்கும் மேல் கணிக்கத்தகும் ஒரு ஆலமரத்தை தினமும் வியந்து பார்ப்பதாயும் சிலாகித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.

அன்று அலுவல் காரணமாக வெளியில் சென்று விட்டு திரும்பி நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்தேன் வாகனத்திற்காக.நேரமாகும் என்பதால் மரங்களின் நிழலில் நடந்து கொண்டு எதிரில் வரும்போது மறித்து ஏறிக்கொள்ளலாம் என நடக்கத் துவங்கினேன். உயிரைக் காக்க கவசம் வேண்டுமோ இல்லையோ..அங்கு மிதக்கும் தூசுகளிடமிருந்து காத்துக் கொள்ள கண்டிப்பாக கவசம் கட்டாயம் வேண்டும் எனத் தோன்றியது.வேலிக்கு அப்பால் இருக்கும் மரங்களுக்கூடாகவும் மண்டிக்கிடக்கும் செடிகளுக்கூடாகவும் புகுந்து செல்ல வேண்டும் போல் இருந்தது.என் பணியிடம் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லாத எனக்கு அதெல்லாம் நடக்காத காரியம்.. வழியில் வேலியின் அருகில் கம்பிகளுக்குள் சிறைப்பட்டு சிரமப்பட்டு வளர்ந்து கொண்டிருந்த சில மரங்கள், இவர்கள் பிடுங்க மட்டுமில்லை சிலவற்றை நட்டதும் தெரிந்தது...உள்ளே ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நடந்ததில் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்து விட்டிருந்தேன்...உள்ளே செல்ல செல்ல தூசுகளும் காற்றில் அதிகம் மிதந்தன.. வேலியின் அருகில் புற்கள் அதிகமிருந்த இடத்தில் ஓரமாக நின்று கொண்டேன்..வெளியிலிருந்து உள்ளே செல்ல செல்ல பொலிவிழந்த மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.அவையாவும் தங்களின் அழகான பொழிவான முகத்தில் கரி பூசி விட்டதனால் முகத்தை யாருக்கும் காட்டாமல் தலையைக் குனிந்தவாறே இருந்தது மிகுந்த வேதனையைத் தந்தது. அவ்வப்போது காற்றில் அசைந்த இலைகளின் ஊடே, தூசுகளையும் கரியையும் உங்களின் மேல் பூசுவதால் எங்களை மன்னியுங்கள்.. எங்கள் மேல் தவறில்லை என்று கெஞ்சுவதும்.. அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்..அவர்களை நிறைவாக்க எங்களை கரியாக்கிக் கொள்கிறோம் என்று மாறி மாறி ஆறுதல் சொல்வதுமான உரையாடல் என் காதில் விழுந்தும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். வேடிக்கை பார்த்தவன் அலைபேசியை எடுத்து வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே என்று மலர விட்டேன். சில நொடிகளில் எங்கிருந்தோ பறந்து எனக்கு சற்று தள்ளி அமர்ந்த வெள்ளைக் கொக்கு ஒன்று தன் நீண்ட மஞ்சள் அலகால் இரையைத் தத்தி தத்தி தேடியது, எனக்கு என் வெள்ளைப் பூக்கள் மலர்ந்த சத்தம் கேட்டு சத்தம் வந்த இடத்தை அது ஆராய்வதாய்ப் பட்டது. அதனுடன் துணையாக இன்னொரு கொக்கும் ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சியும் சேர்ந்து கொண்டது. அட.. நீங்கள் எல்லாம் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா! என்று வாய் திறந்து கேட்கவேண்டும் போல் இருந்தது.. நல்ல வேளை.. நம்மை விட அறிவு குறைந்தவைகளாக அவற்றின் அனுமதியின்றி நம்மால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட எவற்றின் மொழியும் நமக்கு தெரியவில்லை. இல்லையெனில் மீளவே முடியாத குற்ற உணர்வில் மனிதன் வீழ்ந்திருப்பான்…..

எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே பணியிடம் சென்று சேர்ந்தபோது 50 டன் எடை கொண்ட கம்ப்ரசர் ஒன்று ஒரு பெரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்ந்து வந்ததை சிறிய
மரத்தின் கிளைகள் தடுத்துக் கொண்டிருந்ததால் அந்த கிளைகளை வெட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.. அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டேன்... அதைக் காணச் சகிக்காமலும் மற்றும் என் அலுவலின் ஒரு பணியான தர நிர்ணயத் திட்டம் தயாரித்தலில் அந்த கம்ப்ரசரைப் பற்றியும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்ற நினைப்புடனும்..