என்னடா இவன்,எதோ ராக்கெட்டில் செவ்வாய் கிரகம் போய் வந்தது போல் அங்கலாய்க்கிறானே..என்று எண்ணினாலும் சரி.. வேலை வெட்டி இல்லையோ என நினைத்தாலும் சரி. செவ்வாய்க்குப் போய் வந்திருந்தாலும் கூட இந்த எண்ண ஓட்டங்கள் ஏற்பட்டிருக்காது.
இதற்கு முன்னிருந்த நிறுவனங்களில் அலுவலகத்திற்கு சக தோழர்களுடன் மகிழ்ச்சியாக அலுவலக ஊர்தியிலயே பயணப்பட்ட எனக்கு,சில காரணங்களால் அந்த வேலையை விட்டுவிட்டு, ஐந்து மாதங்களாக வேலை கிடைக்காமல் வேறுவழியின்றி இங்கு சேர்ந்த பின் இந்த சிறு நிறுவனத்தில் ஒரு பழைய பஜாஜ் ஸ்கூட்டரை பணிக்காகக் கொடுத்திருந்தது சற்றே அயர்ச்சியையும் எரிச்சலையும் தந்திருந்தது.
இதற்குமுன் தமிழ்நாட்டில் ஸ்கூட்டர் ஓட்டிய சிலரை வெகு அரிதாகக் காணும்போது மனதிற்குள்ளாகவே கேலியாக சிரித்துக் கொள்வேன். அதெல்லாம் வயாதனவர்களுக்கான வாகனம் என்பதாக என் மனதில் ஓர் எண்ணம் படிந்திருந்தது. ஆனால் அது இப்பொழுது எனக்கு!! அது என் வீட்டு வாசலில் வந்து நிறுத்தப் பட்டபோது எதோ எருமை மாட்டை என் வீட்டில் வந்து கட்டி விட்டதாயும் அதன் மேல் அமர்ந்து பணிபுரிய செல்லும்படியும் விதிக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன்.
மறுநாள் மனதே இல்லாமல் அதனை எடுத்து ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோது அதனுடைய அகலம் அதைக் கையாள சிரமம் ஏற்படுத்தியது. சாவி துவாரத்தைத் தேடி அதன் கழுத்துப் பகுதியில் சொருகி விடுவித்தபோது இரவு முழுதும் கட்டி வைத்திருந்த எருமைமாட்டை அதன் கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பி சற்றே விடுதலை கொடுத்துவிட்டதாய்ப் பட்டது.. அதன் மேல் ஏறி அமர்ந்ததும் அதுவரையில் எருமைமாடாய் என் மனதில் பதிந்துவிட்டிருந்த அந்த ஒன்று.... சற்றே பெருத்த கன்றுக்குட்டியின்மேல் அமர்ந்துவிட்டதாய்த் தோன்றியது. அடுத்து ஸ்டார்ட் செய்ய வேண்டுமே.. திரும்பி கீழே பார்த்தபோது கிக்கர் மிகவும் கீழே இருப்பதாய்ப் பட்டது. பைக்கில் ஏறி அமர்ந்ததும் உடனேயே கிக்கரை ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்யும் வசதி இதில் இல்லை.பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இருந்தும் கிக்கரை உபயோகப்பதில் திருப்தி அடைந்தவன் நான். ஆக பைக்கில் இருக்கும் சுறுசுறுப்பு இதில் இல்லாதது, இது முதியோர்களுக்கான வாகனமே என்ற என் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. என்ன செய்ய! கன்றின் மேல் அமர்ந்தவாறே கிக்கரை மிதித்தேன்.. ம்ம்ஹும்.. ஒன்று..இரண்டு..மூன்று...வாயைத் திறக்க மறுத்தது அது. அப்பொழுதாவது இறங்கி அதற்குரிய மரியாதையுடன் கையாண்டிருக்க வேண்டும்.. செய்யவில்லையே.. விளைவு... நான்காவது மிதி..ஓங்கி மிதித்ததில் சற்றே உள்வாங்கி நீட்டிக் கொண்டிருந்த ஒன்று வலது கணுக்காலின் சற்று மேலே எலும்பைப் பதம்பார்த்தது. காலுறையைக் கூட அவ்வளவாக சேதப் படுத்தாமல் மிக அழகாக தோலைக் கிழித்து விட்டிருந்தது அது. என்னுடைய ஷூவும் கூட என்னைக் காக்க மறுத்துவிட்டது எனக்கு வருத்தம்தான். இருந்தும் அதற்கு சேதம் இல்லாததால் சற்று நிம்மதி...(அதைப் பெரிதுபடுத்தாமல் மாலை வந்தே காலுறையைக் கழட்டிய போது காயத்துடன் ஒட்டிக்கொண்டு எரிச்சலைத் தந்தது). முதன்முதலில் சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்து கால் கட்டை விரலில் ரத்தம் கொட்டிய நிகழ்வை ஏதோ ஒரு நினைவலைவரிசையில் சேமித்து வைத்திருந்த எனது மூளை அதைப் புத்துணர்வு செய்து கொண்டது.
இறங்கி கன்றுக்குட்டியை அதன் சிறிய கொம்புகளை வெகு லாவகமாக பிடித்துக் கொண்டே இருந்த இடத்தில் நிறுத்தி அதன் கழுத்து அசையா வண்ணம் அதைச் சிறைப்படுத்தி அதன் ஒரு கொம்பைப் பிடித்து ஆட்டி உறுதிப் படித்திக் கொண்டேன். அன்று பிளான்ட் செல்லும் முன் ஆய்வகம் செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்து வண்டி எடுத்துக் கொள்வதாய்த் திட்டம். ஆட்டோவைக் கேட்டால் என்பது ரூபாய் என்றான். பக்கம்தானே என்று பேருந்து இருக்கிறதா செல்வதற்கு என்று அவனிடம் கேட்டேன்.. அந்த பேருந்தில் ஏறிக் கொள்ளுங்கள் என்று அவன் கை காட்டிய இடத்தில் பேருந்து நின்று கொண்டிருந்ததில் மிகுந்த ஆச்சர்யம் எனக்கு... பின்னே..நமது ஊரைப் போல் பேருந்துகள் அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருக்கும் இங்கு(சட்டீஸ்கர்) உடனேயே பேருந்து கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. ஓடிப் போய் ஏறி அமர்ந்து கொண்டேன்..அலுவலகத்தை அடைந்து வண்டிக்குக் காத்திருந்த போது கொஞ்சம் ஸ்கூட்டர்களையும்(அதை ஓட்டியவர்களும் வயதானவர்களாகவே இருந்தனர்).. ஆய்வகத்திற்குச் செல்லும்போது அதைவிட அதிகமான எருமைமாடுகளும் என் வழியை மறித்துக் கொண்டு சாலையைக் கடந்து சென்றன நிஜமாகவே..
மாலை அறை நண்பன் வந்ததும் அவன் தன் பங்கிற்கு ஒருபக்கம் சாய்த்து இன்னபிற சம்பிரதாயங்களைச் செய்து மிதித்த ஒரே மிதியில் உர்ர்ர் என உறுமியது... எனக்கு கோபம்.. நான் சொல்லிக் கேட்கவில்லையே என்று. சிறிதுநேரம் அலறவைத்த அவன் அணைத்துவிட்டு திரும்ப மிதிக்க, ம்ம்ஹூம்.. அசையவில்லையே.(சிறிதே நிம்மதி எனக்கு, அவன் சொல்லியும் கேட்கவில்லை என்பதால்).சிறிது நேரம் முயன்ற அவன் களைப்படைந்தவனாய் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என வந்துவிட்டான். இடையில் இன்னொருவன் சிறுவயதில் தன்னுடைய தந்தை,அம்மா மற்றும் தங்கையுடன் ஸ்கூட்டரில் பயணம் செய்ததாகவும் அது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் சிலாகிக்க அதற்கு இன்னொருவன், அப்படியானால் அண்ணனிடம் இந்த ஸ்கூட்டரை வாங்கி உன் ஸ்ருதியை ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விட்டு வா என்றதும் ஏற்பட்ட சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன்.
இப்படியாக முதல்நாள் முடிந்துவிட்ட நிலையில் மறுநாள் நண்பன் சென்றதும் திரும்பவும் அவஸ்தையாய்(என்ன செய்ய,அதைப் பார்த்தவுடன் உற்சாகம் போய் விடுகிறது எனக்கு) விடுவித்து நேற்றுபோல் ஏறி அமர்ந்ததும் காலைக் கிழித்தது ஞாபகம் வந்தது. இடதுபுறமாய் ஏறிய நான் வலதுபுறமாய் இறங்கி(சிறுவயதில் பச்சைக் குதிரை விளையாடிய ஞாபகம் வந்தது) மிகுந்த பக்தியுடன் மிதித்தேன்.வலதுபுறமாய் நின்று இடதுகாலால் மிதிக்க சற்று கடினமாகாத்தான் இருந்தது. எங்கே கீழே விழுந்திடுமோ என்ற பயம் வேறு. இன்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அலுவலகத்தில் தெரிவிக்க ஒரு மணி நேரம் கழித்து இருவர் வந்தனர். இருவருமே சற்றே வயதில் மூத்த அலுவலக வாகன ஓட்டுனர்கள்.. எனக்கு சங்கடமாகி விட்டது இவர்களை அனுப்பியிருக்கிறார்களே என்று. ஒருவர் என் நண்பன் நேற்று செய்ததைப் போலவே சாய்த்து சம்பிரதாயம் செய்து மிதித்த ஒரு மிதியில் வாயைத் திறந்து கொண்டது. வெகு நாட்கள் பழக்கம் போலும் இருவருக்கும். முதல் பிரச்சினை பெட்ரோலைத் திறந்து விடவில்லை என்றதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல் நான் நேற்றிலிருந்து முயற்சிக்கிறேன்.. ஸ்டார்ட் ஆகவில்லை என்று திணறினேன்...எனக்கு சற்று வெட்கமாக இருந்தாலும் நேற்று என் நண்பனும் இச்சம்பிரதாயங்களைச் செய்தும் அவனது பேச்சையும் கேட்க மறுத்ததை எண்ணி சற்று ஆறுதலடைந்தேன். ஓட்டி பார்த்து விட்டு தருகிறேன் என்றதும் வாசலை எட்டி கம்பிக்கதவைத் திறந்து ஏற்கனவே எப்படியோ உள்ளே புகுந்த பசுவை வெளியே விரட்டி அவருக்கு வழி அமைப்பதில் முனைந்தேன். என்னைக் கண்டதும் மிரண்டு ஓடிய பசு, ஸ்கூட்டர் அருகில் வந்ததும் ஏனோ திரும்பி அதன் முகப்பை அப்படியே முகர்ந்து பார்த்துக் கொண்டு நின்று விட்டது. எனக்கு ஆச்சர்யமும் சந்தோசமும்..என்னைப் போலவே பசுவும் அதைக் கன்றுக்குட்டி என நினைத்து விட்டதோ என்று.விரட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே நின்று விட்டேன். ஓட்டுனர் விரட்டி சற்றே பின் வாங்கிய பசுவை அதன் கால்களில் இடித்து மேலும் துரிதப்படுத்தினார். மனதிற்குள் திட்டிக் கொண்டேன்.
ஓட்டி விட்டு தந்தவர் நான் ஏறி அமர்ந்ததும் அமைதியானது.என்னைப் பிடிக்கவில்லை போலும். சரி நீங்கள் ஓட்டிப் பார்த்து விட்டு சொல்லுங்கள்,ஏதும் பிரச்சினை எனில் வண்டியைக் கொடுத்து விட்டு அவருடன் செல்லுங்கள், வண்டி ரயில்வே க்ராசிங்கின் மறுமுனையில் உள்ளது என்றவரிடம் விடை பெற்று அவரது சிற்றுந்தை நோக்கி செலுத்தினேன். சிறிது தூரத்தில் சிக்னலை அடைந்து வேகத்தைக் குறைத்ததும் அமைதியானது மறுபடியும்.இறங்கி திரும்பவும் மிதித்து கிளப்பி ரயில்வே கிராசிங் வரும்போது கதவைப் பூட்டியிருந்தார்கள் ரயில் கடந்து கொண்டிருந்ததால். நிறுத்துவதற்கு வேகத்தைக் குறைத்த எனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட விதமாக அதுவாகவே அமைதியானது. ஏற்கனவே இந்த வேலைப் பிடிக்காமல் இருந்த எனக்கு இந்த சம்பவங்கள் அனைத்தும் எரிச்சலூட்டி சீக்கிரம் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என நினைக்கத் தூண்டியது. ரயில வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க பின்னால் இருவரும் வந்து என்ன சார் வண்டி எப்படி இருக்கு என்றனர். வேகம் குறைந்தவுடன் அதுவாகவே நின்று விடுகிறது. நீங்கள் சரி செய்து கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டேன்.அவரும் சரியென்று கார்ப்பரேட்டரை சுத்தம் செய்தால் சரியாகிவிடும் என்றபடி எடுத்து சென்றதும் நான் இன்னொருவருடன் பிளாண்டிற்குள் வந்து விட்டேன்.
மாலை 3 மணியளவில் அழைத்தவர் சார் வண்டி சரியாகி விட்டது. வீட்டில் விட்டு விடவா என்றதும் சரி என்று வைத்து விட்டேன், இவ்வளவு சீக்கிரம் எப்படி முடிந்தது என்று எண்ணியவாறே.
மாலை வந்து அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு பிடித்திருந்தால் எடுத்து ஓட்டிப் பார்த்திருப்பேன். மனதிற்குப் பிடிக்காத ஒன்றைக் கண்டுகொள்ளாதது இயல்புதானே.அதுவும் என்னைப் பிடிக்காதது போல் அந்த பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டது. மறுநாள் காலை என் நண்பன் சென்று விட்ட பிறகு பச்சைக் குதிரை தாண்டி சம்பிரதாயம் முடித்து இரண்டாவது மிதியில் எடுத்து விட்டேன். திணறியபடியே ஓட்டி சிக்னலை அடைந்ததும் பழையபடியே அதுவாக அமைதியானது. பொய் சொல்லி நேற்று என்னிடம் கொடுத்து விட்டான் என நினைக்கிறேன். அதைப் பற்றி அலுவலகத்திலும் புகாரோ ஏதும் நான் தெரியப் படுத்திக் கொள்ளவும் இல்லை. என் விதியைத்தான் நொந்து கொண்டேன். இல்லையென்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வருவேனா! விவேக்கின் பாணியில் எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சிக்னல் விழுந்து பின்னால் இருந்த குதிரைகளும் இன்னபிற வாகனங்களும் என் கன்றுக் குட்டியை அகற்றும்படியாக கதறின.நானும் அவசரமாக இறங்கி ஸ்டார்ட் செய்து ரயில்வே கிராசிங் கடந்து வேகத்தடையில் அணைந்துவிடக் கூடாதே என்று மிக கவனமாய் சென்று கொண்டிருக்க, சைக்கிளில் முன்னாள் அமர்ந்திருந்த ஐந்து ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் என்னைப் பார்ப்பதாக எண்ணி சிரிக்க எத்தனித்தபோது அவனது பார்வை என் ஸ்கூட்டரின் மேல் நிலைபெற்றுருப்பதை உணர்ந்தேன். என் புன்னகை அதுவாகவே அணைந்து விட்டது.அவன் அப்படியே என்னை நோக்கி திருப்பிய பார்வை ஏதோ வெளியில் போய்த் திரும்பிய தந்தை தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாரோ என்று ஆவலாய்ப் பார்ப்பதாய் உணர்ந்தேன். அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது என்று வடிவேலு பாணியை மனதில் நினைத்தக் கொண்டேன்.
சிறிது வேகத்தைக் கூட்டியதும் வண்டியில் ஏற்பட்ட உதறல், என் வீட்டில் இருக்கும் நிஜமான காளைக் கன்றை இழுத்துக் கட்டுவதை விடவும் கடினமாக இருந்ததால் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். ஒருவழியாக நான் பிளாண்டிற்குள் நுழைவதற்கு முன் வழியில் கிட்டத்தட்ட பத்து முறைகளாவது நின்றுவிட்டிருந்தது. சோர்ந்து போய் இறங்கி கையைப் பார்த்தபோது இடது கையில் வண்டியில் ஊற்றப்பட்ட எண்ணெய் ஒட்டிக் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் யாரிடமும் கூறாமல் இந்த மாதத்துடன் வேலையை விட்டுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்... அன்றோடு வேலைக்குச் சேர்ந்து பத்து நாள் முடிவடைந்திருந்த நிலையில்...

No comments:
Post a Comment