Powered By Blogger

Saturday, September 22, 2012

மதிப்பிற்குரிய வேலைக்காரி – மொழிபெயர்ப்புக் கட்டுரை




Maid of honour
 - Antara Dev Sen, Deccan Chronicle, 15-09-2012

      
மீண்டும் இது துவக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. நம் நன்மதிப்புமிக்க ஆனால் இறுதியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான அரசாங்கம் மற்றுமொரு புதுமையான வரைவுடன் வந்திருக்கிறது. வெளிப்படையாகவே அது கணவனிடமிருந்து வீட்டுப் பராமரிப்பை மேற்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஊதியத்தைப் பெறும் வழியை யோசித்துக் கொண்டிருக்கிறது.

’’நல்லது, ஊதியம் என்றில்லை.. இதனை என்னவென்று அழைக்கலாம்? வெகுமதி அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டுக் கொள்ளலாம்’’ என்று சொல்லியிருக்கிறார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

இதிலுள்ள அசௌகரியம் தெளிவாகவே புலனாகிறது.. இல்லத்தின் கம்பீரமான பெண்மணியான நீங்கள், உங்கள் கணவரின் இதய தெய்வமான நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அருமையான நல்ல வழிகாட்டியான நீங்கள், மாறுபாடுகளைக் கொண்டவரும், ஆனால் பணிவான மருமகளான நீங்கள், மிகுந்த இரக்கமுள்ளதும் அதிகாரமுள்ள பெண்ணான நீங்கள், வீட்டுப் பராமரிப்பிற்காக கூலி பெறும் ஒரு வேலைக்காரியின் நிலைக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்வீர்களா? அநேகமாக மாட்டீர்கள்.

ஆனால் நியாயமாக இந்த வரைவானது நிச்சயமாக உங்களைப் போன்றவர்களுக்கானதல்ல. இந்த மசோதா தாங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் எந்த பிரதிபலனும் பார்க்காமல் தன் குடும்பத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டும், வீட்டைப் பரமாரித்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கானது. முதுமையில் பலமிழந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு எந்த சேமிப்பும் இல்லாமல் வேறெங்கும் போக வழியில்லாத தங்கள் சொத்துக்களையெல்லாம் பிரியமான குழந்தைகளுக்கு அளித்த பின் அவர்களாலேயே விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கானது.

ஆம், பொருளாதாரச் சுதந்திரம், நாம் அனைவரும் இப்பொழுது உணர்ந்து கொண்டபடி பொருளாதாரச் சுதந்திரம் பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னரும் கூட இந்தியாவில் இல்லத்தரசிகளுக்கான தொழிற்சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இல்லத்தரசிகளுக்கான கூலி என்ற பொதுவான கோரிக்கை புதிதானதல்ல. 1925-இல் வெளியான wages for wives என்ற ஹாலிவுட் நகைச்சுவை இல்லத்தரசி எவ்வளவு வேலைகளைச் செய்கிறாள் என்பதையும் அவள் கணவனின் வருமானத்தில் பாதியை ஏன் கோருகிறாள் என்பதையும் நியாயப்படுத்தியது. தவிர, பல தசாப்தங்களாக பெண்ணுரிமைக்குப் போராடுவர்களும் கூட இல்லத்தரசிகளுக்கான ஊதியத்தைக் கோரிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க ஏன் நாம் இந்த பரிந்துரையினால் பெரிதும் மகிழ்ச்சியடையக் கூடாது?

ஏனெனில் பெண்களுக்கு அதிகாரமளித்து மேம்படுத்துவதற்குப் பதில், இந்த வரைவு அவர்களை மேலும் கீழ்நிலைப்படுத்திவிடும்.

முதற்கண் துணைவியானவள் திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக இருக்க வேண்டும். அவளை வீட்டுப் பரமாரிப்புக்காக கூலி பெரும் நிலைக்குத் தள்ளுவதென்பது அவளை அவமதிப்பது மட்டுமல்ல; குடும்ப அதிகாரச் சமநிலை உறவுகளையும் இது வெகுவாகப் பாதிக்கும். அனைத்திற்கும் மேல் வீட்டு வேலைக்காரிக்கு இருக்கும் சுதந்திரம்  கூட அவளுக்கு இல்லாமல் போய்விடும். அவள் கிட்டத்தட்ட ஒரு கொத்தடிமையைப் போல், வெளியேறவும் முடியாமல், அவளைச் சுற்றியிருக்கும் சிறந்தவற்றைத் தெரிவு செய்யவும் முடியாமல் அவளது விதி பிரிக்க முடியாத அளவிற்கு அவளது எஜமானனின் குடும்பத்துடன் பின்னிப்பிணைந்து விடும்.

இரண்டாவதாக, திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக, துணைவியானவள் தன் துணையின் வருமானம் மற்றும் சொத்துக்களில் சரிபாதிக்கு உரிமையானவள். அவளுக்குத் தன் கணவனின் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத் தருவதென்பது ஏமாற்று வேலையாக இருக்கும்.

மூன்றாவதாக, இந்தியாவில், வருவாய் பெண்களுக்கான சுதந்திரத்தையோ பெண்கள் மேம்பாட்டையோ உறுதி செய்யவில்லை. கணவன் தன் மனைவியின் வருமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான். மேலும் மனைவியானவள் இன்னும் வீட்டிற்குள் கூட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவளாகியிருக்கவில்லை. 2005-06-இன் ஒரு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி(NFHS) திருமணமான பெண்களில் 20 முதல் 24 சதவிகிதத்தினரே தங்கள் சம்பாத்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். எஞ்சியவர்கள், அதாவது கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பெண்களின் வருமானம் முழுவதுமோ அல்லது அதில் பெரும்பகுதியோ அவளது கணவனாலோ அல்லது மற்றவர்களாலோ கட்டுப்படுத்தப்படுகிறது.

நான்காவதாக, அவள் வீட்டில் செய்யும் வேலைகளுக்காக அவளது கணவனிடமிருந்து அவனது வருமானத்தின் பகுதியைப் பெற்றுத் தரும் யோசனை தவறானது. குறைபாடுகளைக் கொண்டது. கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மனைவியின் வருமானம் நின்று விடுகிறது, ஆனால் அவளது வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவள் இப்பொழுது முதுமையடைந்து விட்டதால் அவளது பணி மிகுந்த சிரமமானதாகவே இருக்கும். வேலையின் மீதான எதிர்பார்ப்புகள் முன்னமிருப்பது போலவே தொடரும்பொழுது, ஒரு ஊதியக் கட்டமைப்பில் வருமானம் எதேச்சதிகாரமாக நிறுத்தப்படக்கூடாது(அல்லது திடீரென்று குறைந்து விடக்கூடாது-கணவனின் ஓய்வூதியத்தின் சிறு பகுதியை அவளது வருமானமாக எடுத்துக் கொள்ளும்போது).

ஐந்தாவதாக, வர்த்தகம் சாராத, மதிப்பிடமுடியாத ஒன்றிற்கு இவ்வாறான சந்தை சார்ந்த அணுகுமுறை நியாயமற்றது. அர்ப்பணிப்பு உணர்வை, ஈடுபாட்டை, மனைவி மட்டும் தாயின் அபரிமிதமான உரிமை கொண்டாடும் உணர்வை எவ்விதம் ஒருவர் பணத்தினைக் கொண்டு நிர்ணயம் செய்ய இயலும்? வீட்டுப் பராமரிப்பிற்குக் கணக்கு பார்ப்பது முற்றிலும் தவறானது. மேலும் வீட்டைப் பராமரிப்பதற்காகத் தங்கள் வேலையைத் துறந்தவர்களுக்கு இது ஈடு செய்யப்போவதில்லை. அவளுடைய வேலைகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உணர்வுசார்ந்தும் அறிவுசார்ந்தும் உடலுழைப்பில் ஈடுபடும் துணைவி மற்றும் அன்னையரின் பணிகள் எப்பொழுதும் கருத்தில் கொள்ளப்படாது.

ஆறாவதாக, இந்த வரைவின்படி மனைவியானவள் எப்பொழுதும் தன் கணவனை விட அதிகமாக சம்பாதித்துவிட முடியாது அல்லது அவள் ஒரு பெரு நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிக்கொள்ள இயலாது. அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது நாம் இல்லத்தரசிகளை அடக்கி ஒரு வரையறுக்கப்பட்ட ஒப்பீட்டின் கீழ் நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.அவள் எப்பொழுதுமே தன் கணவனுக்கு அடிமையாகவே, குறைந்த ஊதியம் பெறுபவளாக, ஒரு நல்ல மனைவியாக, தாயாக வார்த்தைகளில் வடிக்க இயலாத நற்செயல்கள் செய்பவர்கள் எதனையும் பெறாதவர்களாவே இருக்கிறார்கள்.

ஏழாவதாக பெண்கள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அவளது கணவனைச் சார்ந்திருப்பது குறைக்கப்படவேண்டுமேயன்றி அதிகப்படுத்தக் கூடாது.

ஆக, பெண்ணியவாதிகள் இல்லத்தரசிகளுக்காக ஊதியம் கோரிக் கொண்டிருந்ததெல்லாம் தவறானதா? நாம் இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் செய்யும் பங்களிப்புக்கு அங்கீகாரம் வேண்டும், உழைப்புக்குப் பணமதிப்பு வேண்டும் எனும் தீவிர தேவையிலிருந்து பெண்ணியவதிகளின்  அறைகூவல் கிளம்பியது. கவனிப்பது, கணக்கில் கொள்வது, மதிப்பளிப்பது எனும் தேவைகளை அது முன்னிறுத்துகிறது. பெண்கள் செய்யும் வேலைக்கு எல்லையே இல்லை, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த கூவலானது உரிமை, சட்டபேறு பற்றியது, பணம் பற்றியது மட்டுமல்ல. மறைக்கப்படுவது, உரிமை நிராகரிப்பு மற்றும் சமூக நிராகரிப்பு பற்றிய பிரச்சனை இது. பணம் என்பது ஒரு எல்லைவரை மதிப்பைக் கொடுக்கிறது. உங்களை, உங்கள் குடும்பத்தை பாதிக்கும் விசயங்கள் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அது வழங்குகிறது அவ்வளவுதான்.

மணமான பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவள் சம உரிமை கொண்டவளாக இருப்பதை, தன் கணவனின் சொத்துக்கள், முதலீடுகள் போன்றவற்றை கையாளும் உரிமை கொண்டவளாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது. மனைவியின் வருமானத்தின் மீது கணவனுக்கும் அத்தகைய உரிமை உண்டு.  திருமணம் என்பது சமமான பங்கீடைப் பற்றியது, ஒருவர் முன் அலுவலகத்தைக் கவனித்தால் மற்றொருவர் பின்னால் இருக்கும் வேலைகளைக் கவனிக்கிறார்.

அரசாங்கம் பெண்களின் நிலையை உயர்த்துவதற்குப் பொதுவான சிலவற்றின் மூலம் உதவலாம். சம உரிமகளுக்கான விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலமும், ஆண் பெண் செய்யும் வேலைகளுக்கு எவ்வித பாகுபாடுமில்லாமல் சம ஊதியத்தை உறுதி செய்வதன் மூலமும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதன் மூலமும் உதவலாம். பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் செவ்வனே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, குடும்ப வன்முறை சம்பந்தமான கிட்டத்தட்ட 15000 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏன் ஒன்றிற்குக் கூட இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் உள்ளது?

நிதி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தம்பதியினரின் கூட்டுக் கணக்கிற்கு, இல்லத்தரசிகளின் முதலீட்டிற்கு அரசு வரிசலுகைகள் தரலாம். திருமணமானவர்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களது ஊதியம் இருவரும் சேர்ந்து துவங்கிய கூட்டுக் கணக்கில் சேர்க்குமாறு பரிந்துரைக்க முடியும். சம உரிமைகள் மற்றும் சம அணுகுமுறையை மேம்படுத்துதலில் மட்டுமே அரசின் கவனம் இருக்க வேண்டும்.

ஆனால் மிக முக்கியமாக, இன்றியமையாத, ஊதியமில்லாத வேலைகளுக்கு (சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மனைவி அல்லது தாய் ஆக்கப்பூர்வமாகவும் இணையான பங்கு வகிப்பதைப் போன்ற) அரசு வெகுமதி அளிக்க முன்வந்ததற்கு நாம் புத்துயிர் அளிக்க முடியும். இது பாராட்டுதல், மரியாதை, மேன்மை, சுயமரியாதை, கௌரவம், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றை உள்ளடக்கியது. சுருங்கக் கூறின், நாம் பெண்களின் சேவைகளுக்கு பண நிர்ணயம் செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு நல்வாழ்விற்கு மதிப்பு தருபவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பில் உதவி - கொற்றவை



Sunday, April 1, 2012

படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்


படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்

 ம.க.இ.க. பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பேசிய உரையினை நூலாக்கியுள்ளனர் கீழைக்காற்று பதிப்பகத்தார்...

எனது நன்றிகள் கீழைக்காற்று பதிப்பகத்தாருக்கும் மற்றும் பதிப்பகத் தோழர்களுக்கும்...புத்தகக் கண்காட்சியில் இந்த நூலையும் இன்னும் சில நூல்களையும் பரிந்துரைத்தமைக்கு...

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களை மாத வார இதழ்களைப் படிப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருப்பேன்.. கைகளில் பாடப்புத்தகங்களை விட அந்த இதழ்களே அதிக நேரம் அமர்ந்திருக்கும்..கல்லூரி நாட்களில் இலக்கியவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் எவரும் வாய்க்கவில்லை...நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். இன்றும் கூட அதிகம் இல்லை.. ஆனால் ஆர்வம் காரணமாகவும் கிடைத்த நல்ல நட்புக்களின் உதவியினாலும் கிடைக்கும் நேரத்தில் இப்பொழுது சற்று அதிகம் வாசித்தும் கொண்டிருக்கிறேன்.. கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்று ஆரம்பப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

 இந்த நேரத்தில் கைகளில் கிடைத்தது இந்நூல்.. எப்படி படிக்க வேண்டும் என்பதை விட எதற்காக படிக்கிறோம் என்பது வாசித்தலின் ஆர்வத்தை மேம்படச் செய்வதுடன் வாசித்தலுக்கான சிறந்த இலக்கின் அவசியத்தை உணர்த்துகிறது...நம்மையுமறியாமல் முதலாளித்துவத்தின் ஆளுகைக்குட்பட்டு பிள்ளைகளைக் கசக்கி பிழிந்து அவர்களைச் சோர்வாக்குவதுடன் அவர்களது ஆளுமைத் திறனையும் குறைத்து விடுகிறோம்.அவர்களின் மீது கொண்டுள்ள அக்கறை என்று பெற்றோர்கள் கூறுவது எவ்வகையில் சேர்ப்பது... சமூகம் முதலாளித்துவத்திற்கு ஆட்பட்டு சீர்குலையும் நிலையில் தனது பிள்ளைகளையும் ’அவர்களுக்கேற்றார் போல்’ தயார்செய்து (முதலாளி தன் நிறுவனத்திற்காக இயந்திரங்களைத் தயாரிப்பதும் வாங்குவதையும் போல்) அவர்களுக்கு அர்ப்பணிப்பது எப்படி அக்கறையாகும்.. சமூகமும் ஊடகமும் எவ்வாறு ஒருவனை சோர்வாக்குகிறது என்று மட்டுமில்லாமல் அவனது ஆற்றலை எவ்வாறு அழிக்கிறது என்பதையும் அழகாக பேசியிருக்கிறார்.

புத்தகத்தின் உள்ளே உள்ள தலைப்புகளில் சில..

காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!
உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!
முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!
படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

ஒரு நோக்கமில்லாமல் படிப்பதை விமர்சனம் செய்யும் தோழரின் வார்த்தைகள்....

அந்த காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக்கொண்டிருப்பேன்.ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது.அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார்.அப்போது எனக்கு புரியவில்லை.. நாம் சீரியசாகத்தானே படிக்கிறோம்.இதிலென்ன pleasure என்று நினைத்தேன்.உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார்.அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு.அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாத கூட்டம் இருக்கிறது.

 என்று தொடர்கிறது தோழரின் வார்த்தைகள்..

 கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலில் சில நூல்களையோ அல்லது கட்டுரைகளையோ படிக்கும்போது சிலது புரியாமல் நம்மைச் சோர்வடையச் செய்யும்.அதைப் போன்ற அனுபவம் எனக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் நமது அறிவை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாய் முன்னிறுத்துகிறது இவரது வார்த்தைகள்.அதை விடுத்து எழுத்தாளரை அவர் புரியாதபடிக்கு எழுதுகிறார்;இன்னும் இலகுவாக எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்.

மார்க்ஸ் நூலையோ, லெனின் நூலையோ, அப்படி ஆய்வுப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக்கூடிய இலக்கியங்கள், கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும்.இன்னொரு முறை படிக்க வேண்டும்.பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும்.படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும்.புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்’ என்கிறார்.இப்பொழுது படிப்பதில் ஒன்றும் எனக்கு பிரச்சினை இல்லை.நேரம் கிடைக்குபொழுதெல்லாம் படித்துவிட முடியும்.. சிந்திக்கவும் அதனைப் பற்றி புரியாதபட்சத்தில் விவாதிக்கவும் நண்பர்கள் இன்னும் அதிகம் தேவையாயிருக்கிறது. தேடுதலும் மிக அவசியம்தானே!

 படிப்பதும் ஒருவகையில் உழைப்பே என்கிறார் தோழர். நம் ஆர்வத்திற்காக மட்டுமின்றி வாசித்தலில் ஒரு நோக்கமும் இலக்கும் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது இவரது வார்த்தைகள்..

மேலும் மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகம்தான் நியாயமானது,இந்த சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்படமுடியாதது என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்துரீதியாக அடங்கியிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள்.அதற்குப் பிறகு அடங்காமல் போனால்தான் துப்பாக்கிமுனை என்கிறார்.

கருத்துரீதியான ஆளுகைக்கு முதலாளிகளுக்கு கைகொடுப்பது மதமும் அதைத் தொடர்ந்த கடவுள் நம்பிக்கையும்.. இது சம்பந்தமான ஒரு வெற்று பிம்பத்தை மக்களிடம் பரவலாக்கி அதனை மீறி யோசிக்க விடாமல் தங்கள் ஆளுகைக்குள்ளாகவே வைத்திருப்பதில் இவற்றின் பங்கும் கணிசமாக இருக்கிறது.

 கம்யூனிசம், பெரியார்-அம்பேத்கரியக் கொள்கைகளால் பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றலை இலக்குடன் கூடிய படிப்பின் துணைகொண்டே அடையமுடியும் என்கிறார் தோழர் மருதையன்.

ஒவ்வொருவருக்கும் போராட வேண்டும் என்று அவசியம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் தங்களின் சமூகத்தைப் பற்றியும் அது எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பரந்த பார்வை அவசியம்.அதனை இலக்குடன் கூடிய படிப்பு மற்றும் விவாதத்தின் துணையுடன் நிச்சயம் அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் முப்பது பக்க நூல்.

Tuesday, January 24, 2012

விவசாயக் கிழவன் சாகக் கிடக்கிறான்..


இன்று ஒரு விவசாயக் கிழவன் சாகக் கிடந்தான்
என் கிராமத்தில்

தகப்பனின் தாய்மாமன்...
தாத்தன் அவனெனக்கு...
சாவு சட்டென வந்து விட வேண்டும்...
கொடுமையடா சாமி..

எட்டு வயதில்
என் தாத்தனின் சாவை அருகில் இருந்து பார்த்தேன்..

இழுத்துக் கொண்டிருந்தது..
சுற்றியும் உறவினர்கள்....
பாலூற்றிக் கொண்டிருந்தார்கள்...

என் தகப்பன் ஒருபுறம் மயங்கி விழுந்தான்..
எட்டு வயதில் எனக்கென்ன தெரியும்...
என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
வாண்டுகள் நாங்கள்...
பெரியப்பனின் சின்ன மகன் சொன்னான்...
வெங்குடு..
என் அண்ணன் அழுவான் இப்பொழுது..
சேர்ந்தழுவோம் என்று..
அந்த அண்ணனுக்கு ஒன்பது வயது..
சிரித்துக் கொண்டேன்..

பிறகு என்னையும் பாலூற்றச் சொன்னார்கள் பேரனென்று..
வெள்ளைத் துணியில் பாலை நனைத்து
ஊற்றிய பாலில்
கொஞ்சம் தொண்டையில் இறங்க
அதிகம் ஒழுகியது கடைவாயில்..
பிறகு நடந்தது ஞாபகம் இல்லை...
அவன் உயிர் போய்விட்டது...

அவனும் விவசாயக் கிழவந்தான்..
உழைத்த எவனுக்குமே உடல் கூடாய்த்தானிருக்கிறது..

இந்தக் கிழவனும் அப்படித்தானிருந்தான்..

இக்கிழவன் எனக்குக் கொஞ்சம் பிரியமானவன்..
இப்பொழுதுதான் அந்த நினைப்பே வந்தது
பிரியமானவனென்று

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அதனால்தான் பிரியமாய்ப் போய்விட்டான் போல்..

அவன் அதட்டலும் கூட
சிரிப்பாகவே வரும்..

இன்று கலங்க வைக்கிறான்..

பச்சை கிராமம் எங்களது முன்பு
இப்பொழுது இல்லை சொல்லுமளவு..

ஏனில்லை
இதோ..
இந்த கிழவன்களைக்
காவு கொடுத்து காவு கொடுத்து
அத்தோடு பச்சையையும் காவு கொடுத்து விட்டோம்.
இல்லை..
காவு கொடுத்து காவு கொடுத்து
காவு கொடுத்து விட்டேன்...

வத்தலையும் பருத்தியையும்
மூடை மூடையாக
கு(வி)ண்டால் கு(வி)ண்டாலாக
அளப்பவன் இவனும் காயாம்புவும்..

வத்தலின் வாடையிலும் இருமலையும் சகித்துக் கொண்டு
தடித்த நூல் கயிற்றின் தராசில்
ஒருபக்கம் படிக்கல்லும்
மறுபக்கம் ஈய வாளியில்...
வத்தலும்..

எண்ணுவான் ஒவ்வொரு வாளிக்கும்...
இல்லை.. பாடுவான்...
ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு...

மூடையில் கொட்டிவிட்டு இரண்டாவது வாளியில்
ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு...

இப்படியே தொடரும்...
வாளி வாளியாய்...
ராகம்.. ராகமாய்..
இன்றோ..
ரணமாய்...

அந்த பாட்டுக்காகவே பக்கத்தில் நிற்பேன்..
போ.. ம்மையா.... போ.. ம்மையா...
இருமல் வரும் என்பான்...
கிழவன்...

இன்று இழுத்துக் கொண்டிருக்கிறான்...
சட்டென நிற்காதா மூச்சு...
அவன் செத்தபின் வந்திருக்க வேண்டும்
பாவி நான்...

எப்பொழுது போனாலும்
ஏ(ம்)வி ம்மையா... ஏ(ம்)வி ம்மையா...
என்பான் வாய் நிறைய.. அன்பொழுக..
அந்த வாயில் இன்று ஊற்றப்பட்ட
துளசிநீர் அதிகம் தொண்டைக்குள்ளும்
கொஞ்சம் கடைவாயிலும் ஒழுகியது..

மகள்கள் மூவரும் அழுது கொண்டிருந்தார்கள்
கட்டிய மனைவியும் தான்..

மூத்த மகளை பெத்த செல்லி
இடையவளை நடி செல்லி
இளையவளை சின்ன செல்லி என்பான்...

அவர்களுடனும் தோழமையே கொண்டவன்..
கிழவன்...

மகன்கள் இருவரும் துபாயில்
இன்றிரவு வந்து விடுவார்கள்..

மூத்த மகளும் மனைவியும்
அவன் புகழ் பாடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்...

கிழவன் என்ன செத்தா போய்விட்டான்..
எழுந்து ஓரம் போங்கள்...
தொண்டை வரை வந்ததை அடக்கிக் கொண்டேன்...

அம்மா என்றான்.. அய்யா என்றான்...
இடையிடையே குழறிய நாக்கில்
நாக்கு சற்றே உள் வாங்கியிருந்தது...

மூச்சு மிகுந்த சிரமத்துடன்
வயிறு மேலும் கீழும்

இடையிடையே தன்னிச்சையாக
எழுந்தமர்ந்தான்..
தொப்பென சாய்ந்தவனை
தலை தாங்கிப் பிடித்தான் என் மாமனொருவன்...

எழுந்தமர்ந்த பொழுதெல்லாம்
மனைவி கேட்டாள் தலையைத் தடவி..
என்னையா... என்னையா வேணும்..
அதட்டலாய்...
குழறலாய்ச் சொன்னான்...
தோசுகா.. தோசுகா...

மூத்த மகள் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்தாள்..
தட்டிவிடவே முயன்றான்...

மகன் வழிப் பேத்தி காலில் ஏறமுயன்றாள்...
குனிந்து முழித்துப் பார்த்தவன்...

புரிந்து கொண்டான் போல் ஒன்றரை வயது குழந்தையை
வலக் கையை மட்டும் ஆட்டினான்
குழந்தையின் முகத்திற்கு நேரே..
வேண்டாம்... வேண்டாம் என்று...

குழந்தையை சட்டென அதன் தாய் வாரிக் கொண்டாள்...

பக்கத்தில் ஒப்பாரிக்குத் தயாராயிருந்த கிழவியொருத்தி சொன்னாள்
கிழவனுக்கு தாய் தந்தை முகம்
ஞாபகம் வருமாம்
அதனால் இந்த ஆர்ப்பாட்டமாம்...

அப்படியா கிழவா?
உன்னுள் நான் வர வேண்டும்
இல்லை நானும் சாக வேண்டும்
உன்னை அறிய...

இதோ...
எழுபதுகளில் துடிக்கும்
கிழவனைக் காண
தொண்ணூறுகளில் நடமாடும் ஒரு கிழவன் வருகிறான்
கம்பையூன்றிக் கொண்டே...

அய்யா.. பாருங்கையா - மனைவி

உட்காரக்கூட இல்லை,,
கம்பூன்றி நின்று கொண்டே..
உற்றுப் பார்த்தவன்
உதிர்த்தான் சிலவற்றை..
இன்னும் நேரமாகும்
இரு வார்த்தைகளில் உதிர்த்துவிட்டு
திரும்பாமல் நடந்து சென்றுவிட்டான்

காலையில் நான் வந்தவுடன் பார்த்தபொழுது
இவ்வளவு கூட்டம் இல்லை..

மூத்த மகளும் மனைவியும் மட்டும்
அழுது கொண்டிருந்தார்கள்..

தாத்தா.. தாத்தா.. என்றேன்
மெதுவாகவும் பின்
சத்தமாகவும்

கையைப் பிடித்தேன்
பின் கன்னத்தில் தடவி
தாத்தா.. தாத்தா.. என்றேன்..

சிரமப்பட்டு மூச்சு விட்ட கிழவனிடம்
பதிலேதும் இல்லை...

பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன்
ஒருக்களித்துப் படுத்திருந்தான்

சற்று நேரம்..

மடக்கியிருந்த இடதுகை சட்டென கீழே விழுந்தது
என்னை நோக்கி..
இரையைப் பிடிக்க பம்மி
சட்டென நகரும் பல்லியாய்
இன்னும் கொஞ்சம் நீண்டது..

நான் தொடவில்லை..
ஏன் எனத் தெரியவில்லை,,,

மலவாயில் வைக்கப்பட்ட சீலையை
மனைவி சரி செய்தாள்..
சிறுநீர் கழிக்க தொப்புளுக்குக்கீழ்
துளையிடப்பட்டு சொருகப்பட்டிருந்த மஞ்சள்குழாய்
தெரியாதவாறு போர்வையைச் சரி செய்தாள்...

கிழவனின் கை சுவற்றில் உரசி உரசி புண்ணாகியிருந்தது...

இரு பத்தாண்டுகளுக்கு முன்

கிழவனின் பச்சை வயலில்...
கிழவன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்..

கிணறுகள் எதுவுமே சுற்றுச் சுவர் இல்லாமல்
மொட்டையாகத்தானிருக்கும்
ஒட்டிச் செல்லும் வாய்க்காலில்
நடக்கவே நடுநடுங்கும் எனக்கு...

ஓரமிருக்கும் பப்பாளி மரத்தில்
பழம் தேடிப் பறித்துத் தருவான்
மறக்காமல் சொல்வான்
தம்பிக்கும் குடுய்யா என்று..

அந்த கைகள்தான் இது...

போடா கிழவா..
எழுந்து வந்து விட்டேன்....

மதியத்திற்குப் பின்

பார்த்தபோது
சுவாசம் சற்று சீராகியிருந்தது...
கொஞ்ச நேரம் பார்த்து விட்டு வெளியே வந்தேன்..

ஊர் மடத்தில் அமர்ந்திருந்தேன்..
ஊர்க்காரர்களின் நல விசாரிப்புகள்

சித்தப்பன் ஒருவன் வந்தான்
பேசிக் கொண்டிருந்து விட்டு
சட்டென ஞாபகம் வந்தவனாய்க் கேட்டான்
சாப்பிட்டாயாடா என்று...
காலையில் சாப்பிட்டேன்..
இன்னும் நேரமாகவில்லை
பிறகு சாப்பிடணும்

வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக் கொண்டான்
வீட்டுத் திண்ணையில் இன்னொரு கிழவன்
சித்தப்பனின் அப்பன்...
இவனும் விவசாயக் கிழவன்
உழைப்பவன்.. உடல் கூடில்லை!

இவன் உடல் கூடாகியிருக்காது
மாறாய் இரும்பாய் இறுகியிருக்கும்..
நரம்புகள் ஆங்காங்கே புடைத்திருக்கும்
முழங்காலின் கீழ் பின்பகுதியில்
நரம்பு முடுச்சு ஒன்று
பாம்பு போல் சுருள் சுருளாயிருக்கும்

இன்னொரு திண்ணையில் வெள்ளாடு ஒன்று...
அசை போட்டுக் கொண்டிருந்தது...
மெதுவாகச் சென்று
பிடரியில் கைவைத்து அழுத்தி
நகராமல் பிடித்துக் கொண்டேன்
அது திமிரி எழுந்ததும் இன்னும் அழுத்தி
நான் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்
குதூகலம் எனக்கு..

அதன் வாயை என் வாயருகே கொண்டு வந்து
அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்பொழுதும் அசையை நிறுத்தவில்லை
திமிர் பிடித்த ஆடே
பயமில்லை உனக்கு..

ஐயோ..
பயமெதற்கு அதற்கு..
என்னை ஆடு புரிந்து கொண்டது..
நான் தான் மறந்து விட்டேன்
அதன் மொழியை..
ஆமாம்..
நானும் ஆடுகளும் பேசிக் கொள்வோம்
இளம்பிராயத்தில்

என் பிடியின் அழுத்தத்தால் சற்று இருமியது
அசை போட்டுக் கொண்டே..
பிடிதளர்த்தி கொஞ்சம் தட்டி விட்டேன்...

என் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவன்
மெதுவாய் ஆரம்பித்தான்...
கிழவன் மறைத்து வைத்திருந்த கத்தி
என் கண்ணில் படவில்லை..

எப்படா வந்த
காலையில் ரத்தினாவுக்கு தாத்தா

இப்ப எங்கடா இருக்க
ஒரிசால தாத்தா

எவ்ளோடா குடுக்குறாங்க
முப்பது ரூவா தாத்தா

இடையே உள்ளிருந்து சித்தப்பன்
டேய் மகனே வாடா சாப்பிடலாம்

இப்ப வேணாம் சித்தப்பா

கிழவன் தொடர்ந்தான்
வெளில போகலையாடா
பாத்துக்கிட்டுருக்கேன் தாத்தா
இன்னும் அமையல..
போய்ட்டுதான் வீடு கட்டணும்...

எங்க டவுண்லயாடா...
இதைக் கேட்டவன் முகத்தில் எந்த சலனுமில்லாமல் கேட்டான்
அதனால்தான் அவன் கத்தியைக்
கூர்தீட்டியதும் எனக்குத் தெரியவில்லை

ஆமாம் தாத்தா..

காடுகரையெல்லாம் பொட்டலா விட்டுட்டு போய்ட்டீங்களேடா

சிறு மௌனம்-பின்
ஆமாம் தாத்தா..
ஊரே வெறிச்சோடி இருக்கு தாத்தா

கிழவனின் கத்தி இப்பொழுது பளபளப்பாகத் தெரிந்தது
ஆனால் எந்த அவகாசமுமில்லாமல்...

போதும்டா முப்பது ரூவா...
இங்க இருடா...
ஊர்ல இளவட்ட பயலுகளே இல்லடா...’

சர்வ சாதாரணமாக
முழு வீச்சில்
கிழவனிடம் சலனமில்லாமல்
வெகு ஆழமாய் இறங்கியது கத்தி...

சொன்னவன் பதிலை எதிர்பாராமல்
வீட்டிற்குள் நடந்தான்..

கண்களில் கண்ணீர் குளம்...
பிடி சற்று இளகியதையறிந்த வெள்ளாடு
என் மடியில் முன்னங்காலை ஓங்கி அழுத்தி
திண்ணையிலிருந்து பாய்ந்து குதித்தது
ஐந்தடி தாண்டி...

புழுக்கை போட்டு விட்டு திரும்பி
நான் கண்களைத் துடைப்பதைப் பார்த்துக் கொண்டது

மெதுவாக படியேறி அந்த கிழவனின் பின்னாலேயே
வீட்டிற்குள் சென்றது

சித்தப்பன் மறுபடியும்
டேய் வாடா சாப்பிடலாம்..

நான் அந்த ஆட்டின் பின்னாலேயே சென்றேன்

வலப்புறம் இரண்டு ஆட்டுக் குட்டிகள்
இரை தின்று கொண்டிருந்தது
சித்தப்பன் ஆட்டுக் குட்டிகளை விரட்டி விட்டான்

சம்சாரி வீடுடா... என்றான்
சிரித்துக் கொண்டே..

நானும் சம்சாரிதான்
நினைத்துக் கொண்டேன்
சொல்ல வெட்கம்...

மொச்சைக்காய் குழம்பும் ரசமும்
ஒரு சட்டியில் நிறைய சாதமும்
தட்டில் பரிமாறிக் கொண்டே
எல்லாத்தையும் முடிக்கணும்டா என்றான்...

பாட்டிக்கு...

தூக்கு சட்டில கொண்டு போயிருச்சுடா..

விவசாயத்தைப் பேசிக் கொண்டே சாப்பிட்டோம்
உப்பு சற்று அதிகம்..
கிராமத்துச் சுவை வெகுநாள் கழித்து...

சாப்பிட்டு வீட்டின் முன்
ரோட்டிற்கு வந்தோம்..

இதோ
இந்த கருவேல மரங்களும்
பொட்டல் நிலமும்
கொஞ்சம் புதரும்
மண்டிக் கிடக்கிறதே...

இருபதாண்டுகளுக்கு முன்
இந்த பச்சை நிலத்தில்
நான் கிணற்று நீரில் குளித்தேன்...

குளித்த அன்றே செத்திருக்க வேண்டும்...

மறுபடியும் கிழவனைப் போய் பார்த்தேன்.
துளசி நீரின் உதவியோ என்னவோ
சுவாசம் இன்னும் கொஞ்சம் சீராகவே இருந்தது

ஈராண்டுகளுக்கு முன் செத்துப்போன
என் தாத்தன் வீட்டினுள் வந்தமர்ந்தேன்
பாட்டியினருகில்...

திண்ணையில்
என் இன்னொரு தாத்தனும் பெரியப்பனும்
தலையெல்லாமல் வெளுத்தவன்,,
செத்த என் தாத்தனுக்கு தம்பியவன்
என்பதைக் கடக்கப் போகிறவன்
உரையாடினான் உரவிலைபற்றி..

பொட்டாஷ் உரமெல்லாம் விலையேறிப் போச்சு
இனி விவசாயம் செய்ய முடியாது
இவன் வாயிலிருந்தா இந்த வார்த்தை..
அடேய்
போதுமடா கத்தி சுத்தியது
தாங்க மாட்டேன் நான்..

ஆண்டவா
என் இரு கால்களை
உன்னொரு கையால்
இறுகப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி
ஒரே அடியில் என் தலை தரை மோத
வெடித்துச் சிதற விடு...

இவ்வளவைக் கேட்ட பின்னும்
என் பாழாய்ப் போன படிப்பினை
தூக்கி எறிய மனம் வரவில்லையே..
வடிகட்டிய முட்டாளும்
சுயநலவாதியும் நான்...

இந்த கிழவன் காலையில் சொல்லியிருந்தான்
சாகக் கிடக்கும் கிழவனின் வாயிலில் அமர்ந்து கொண்டு
என் மாமன் முறையான ஒருவனிடம்
இந்த வீட்டை 1957ல் கட்டினானாம் 2700 ரூபாய்க்கு
இப்பொழுது கட்டினால் இருபது லட்சத்திற்குக் குறையாது
இந்த குக்கிராமத்தில்

உடனே மாமன் கேட்டான்
அப்போ மரம் விட்டமெல்லாம் இத்துப் போயிருக்குமே...
சளைக்காமல் சொன்னான் கிழவன்
நாகூரிலோ நாகர்கோவிலிலோ
அணாவிற்கு வாங்கினதுடா அப்போது
இன்னும் நூறு வருசத்திற்கு இருக்கும்
பெருமையுடன் சொன்னான்

அந்த கிழவன் தான் சொல்கிறான்
இனி விவசாயம் செய்ய முடியாது

ஜெர்மனிய அடிமை
நான் சொல்கிறேன்
இருடா கிழவா..
உன்னையும் காவு கொடுக்கிறேன் விரைவில்

இரவு எட்டு மணி...

கொண்டு வந்த புத்தகப்பையை
சுமந்து கொண்டு ரோட்டில் நடந்தேன்
பேருந்து நிறுத்தத்திற்கு.

இருட்டில் எங்கிருந்தோ ஓடிவந்த நாய்...
ஊளையிட்டு குரைத்துக் கொண்டே
என்னை நோக்கி ஓடி வந்தது

என்னுள் பெருங்கோபம்
நடையில் அதே வேகம்..
நாயே ஓடி விடு..
என்னை பார்த்தா குரைக்கிறாய்..
நான் பிறந்த ஊர் இது...
இருபத்தாறு ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் ஊர் இது
நேற்று பிறந்த நாய் நீ.
என்னைப் பார்த்தா குரைக்கிறாய்,,,

அதனோடு இன்னொரு நாயும் சேர்ந்து கொண்டது...
அதன்பின் நான் எதுவும் குரைக்கவில்லை

அதுகள் இப்படித்தான் குரைத்திருக்க வேண்டும்...
ஏ.. ஜெர்மானிய அடிமையே
இருபத்தாறு ஆண்டுகளாய்ச் சுமக்கும் ஊரை
என்ன மயிருக்குடா விட்டுப் போகிறாய்
நீ பிறந்த ஊரில்தான் நானும் பிறந்தேன்
அதனால்தான்
நான் உரிமையுடன் குரைக்கிறேன்...
நன்றியுள்ள நாய்களே
இன்னும் சத்தமாய்க் குரையுங்கள்..
வருகிறேன் நான்..

........................

என் ஊர்
பொட்டல் காடாயின்
என் பிணத்தை அங்கு
எரிக்க வேண்டாம்
எரியாது அது
அப்படியே விட்டு விடுங்கள்
அநாதைப் பிணமாய்...
நரிகளும் நாய்களும்
இழுத்துப் போகட்டும்
காக்கையும் பருந்தும்
கொத்தித் திண்ணட்டும்

என் ஊர்
என்னால் பசுமையாயின்-நான்
எங்கிருந்தாலும்
எங்கிறந்தாலும்
தயைகூடி என்னை எடுத்து வாருங்கள்
என் தோட்டம் போகும் வழியில்
வலப்புறம் இருக்கும் சுடுகாட்டில்
கொஞ்ச நேரம் காற்றில் அமர்த்தி
பின் எரியூட்டுங்கள்..

நரம்புகள் முறுக்கி
நான் எழுந்தால்...
வெட்டியானே, என் நண்பனே
தயைகூர்ந்து என்னை அடித்துப் படுக்க வைக்காதே
சற்று நேரம் குளிர்க்காற்றை
கடைசியாய்
ஆசையாய்
வாங்கி விட்டு
நானாய் அடங்கி விடுவேன்....