அன்று மதிய உணவிற்கு சற்று முன் அவசர வேலை காரணமாக தொழில் நிமித்தம் கதிரியக்கத் துறை நண்பர் ஒருவரைச் சந்தித்து விட்டு நண்பனின் மோட்டார் சைக்கிளில் நாங்கள் பணிபுரியும் இடத்திற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தோம் மரங்களின் ஊடாகக் குளுமையுடன்... நான் பின்னால் அமர்ந்திருந்ததால் அண்ணாந்தும் பக்கவாட்டில் திரும்பியும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன்.... ஆந்தை தன் தலையை எனக்குக் கொடுத்திருக்குமாயின் 360 டிகிரியிலும் சுழட்டிக் கொண்டிருப்பேன்..அமையவில்லை... வழியில் வண்டி பஞ்சர்... சரி பார்க்க அவன் ப்ளாண்டின் வெளியே செல்ல ஏழெட்டு கிலோ மீட்டரும் எனது பணியிடம் செல்ல ஒன்றரைக் கிலோமீட்டரும் பயணம் செய்ய வேண்டும்... அவன் சென்று விட நான் இன்னொருவனுக்கு அலைபேசியில் அழைத்த போது அங்கு சாப்பிடுவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. அவனை அழைக்காமல் நடப்பதென முடிவெடுத்தேன் மரங்களின் குளுமையுடனும் ஆலையின் தூசுக்களினூடேயும்..அங்கு பணிக்குச் சேர்ந்து இருவார காலமான நிலையில் பணிதான் பிடிக்கவில்லையே தவிர திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் அடர்ந்திருந்தது ஒருவித குதூகலத்தை எனக்குள் உருவாக்கி இருந்தது. ஏனெனில் இதற்கு முன் பணிபுரிந்த இரு நிறுவனங்களிலுமே பணியிடம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்... அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாலே சுட்டெரிக்கும் வெயில்..குஜாராத்திலாவது பராவாயில்லை.. அரபு நாட்டில் பணிபுரியும்போது தனது தாகத்தைத் தீர்க்க எங்களது உயிரை உறிஞ்சும் வெயில்.. ஒரு மரத்தையோ செடியையோ கண்ணில் பார்க்க முடியாது..இதனாலேயே பல நேரம் அலுவல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுண்டு..போதாதற்கு மதிய வேலையில் எப்பொழுதாவது வெயிலுடன் கூடிய காற்றில் சிக்கினால்..... இரண்டு நாட்களுக்கு நமது பாடு திண்டாட்டம்தான்.. தமிழ் அன்பர்களுக்கு இதைப் பற்றி விளக்கத் தேவையில்லை. பெரும்பாலான தமிழர்கள் தங்களின் குடும்ப தாகத்தைத் தீர்க்க அங்குதானே உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இப்படியிருந்த எனக்கு இங்கு இவ்வளவு அதுவும் அடர்ந்த மரங்களைக் கண்டதும் போகும்போது வரும்போதும் முதலில் சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனால் மற்ற இடத்தை விட மிதமிஞ்சிய வகையில் காற்றில் தூசுக்கள்... வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தேன்... பசித்ததால் வழியில் உணவகம் இருக்கிறதா என பார்த்தும் கேட்டும் கொண்டே.. மிகப் பெரிய ஆலை என்பதால் பல இடங்களில் உணவகங்கள் இருந்தன.. அது ஒரு ஆலை என்பதே என் மனதில் இருந்து மறைந்ததற்காக பல காரணங்களை அடுக்கலாம்.. வழியில் ஒரு பெட்டிக்கடையில்!!! கேட்ட பொழுது நேராக சென்று வலப்பக்கம் என்றார். அந்தக் கடையின் முன் பெரியவர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்... ஒரு மர நிழலில் படுத்திருந்தார் என சொன்னால் அது அந்த வனாந்திரத்தில்?! இருக்கும் ஒட்டுமொத்த மரங்களையும் அவமதிப்பதாகும்.. ஏனெனில் அங்கு என்னை வெளியில் வரமுடியாமல் சுட்டெரித்த ஆதவன் இங்கு என் காலடி தொடுவதற்கு மன்றாடிக் கொண்டிருந்தான் மரங்களிடம். இவ்வளவு மரங்கள் இருந்தும் என்னைப் பாதித்த விடயம் அவற்றில் ஒன்று கூட என்னிடம் பேசவில்லை என்பதுதான்.. பேச்சு.. வேண்டாம்.. ஒரு புன்னகை...இல்லையே... சரி என்னிடம் வேண்டாம்... அவைகளுக்குள்ளாகவும் கூட அவை பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவற்றின் மீது தூசி படிந்து அவற்றை பொலிவில்லாமல் ஆக்கியிருந்தன.. ஓடி விளையாடும் குறும்புக் குழந்தை எதிர்பார்த்த ஒன்று கிடைக்காததால் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டது போலிருந்தது அவைகளைக் காணும்போது..
சற்றுதூரம் நடந்ததும் வலப்பக்கம் ஒற்றையடிப்பாதை ஒன்று பிரிந்தது. நான் இந்த காட்டிற்குள் என்ன இது ஒற்றையடிப் பாதை என்று எட்டிப் பார்த்துவிட்டு இறங்காமல் இடப்பக்கம் எழும்பியிருந்த கட்டடத்தில் ஒரு நொடி பார்வையை நிறுத்தி ஆளரவமற்ற அந்த இடத்தில் நேராக நடந்து கொண்டிருந்தேன்.. திடீரென்று கூவென்று நீண்டது ரயிலின் சத்தம் எனக்குப் பின்னால்.. ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்போதே சில நொடிகள் கழிந்து என் வலப்பக்கம் எனக்கு இணையாக அந்த மரங்களின் இலைகளின் தழுவல்களுக்கு ஊடே ரயில் சென்றது மெதுவாக... ரயில் தளவாடத்தில் பயணம் செய்யாமல் மரங்களின் மடிகளில் ஊர்ந்து செல்வதாகவே பட்டது எனக்கு. குழந்தையை வேண்டுமென்றே முறைத்து அது வாய் கோணி அழ முற்படும் வேலையில் பேஏஏ.... என்று சிரித்து அதன் மெல்லிய இதழில் பூக்கும் புன்னகைப் பூவை ரசிப்பது போல், மரமும் அந்த ரயிலை தன் கிளைகளுக்குள் ஒளித்து வைத்து திடீரென என் கண்முன் காட்டி என்னை மிரளவைத்து அது சிரித்துக் கொள்ள விழைகிறது என எண்ணியவாறே அதை ஏறெடுத்துப் பார்த்தபோது எனக்குதான் ஏமாற்றம். அது எப்பவும் போல் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டுதான் இருந்தது, நான் அதை முறைத்து விட்டு திரும்ப பின்னோக்கி வந்து அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன்.. சில மீட்டர்கள் சென்று ரயில் தடவாளம் கடந்தபோதுதான் தெரிந்தது அந்த பக்கம் இருக்கும் கட்டிடங்கள்.
அதற்குள் வயிறும் உணவு வேண்டும் என பசித்துணர்த்தவே சற்று வேக நடையில் உணவகம் சென்றேன்.. அங்கிருக்கும் எல்லா உணவகங்களுமே ஒரு சிறிய கல்யாண மண்டபம் போல் பெருத்திருந்தாலும் பராமரிப்பு அவ்வளவாக இன்றி அரசாங்கக் கட்டிடம் என்ற முத்திரையை பதித்துக் கொண்டிருந்தது.படியேறி வாசலைத் தொட்ட போது என்னை வரவேற்காமல் பாதி உடலை வெளியிலும் தலையை உள் பக்கம் நீட்டியவாறு கண்களை ஒரு இடத்தில் பதித்திருந்தது ஒரு பசு.. தினமும் வரும் விருந்தினர் போல.. யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.. அதுவும் யாரையும் கண்டுகொள்ளவில்லை..அதனைத் தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்று விட்டு அதன் கண்கள் எங்கு நிலைத்திருக்கிறது என்று பார்த்த பொழுது என்னால் சரிவரக் கணிக்கமுடியவில்லை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதாவது கொடுத்தால் கொடுங்கள்.. இல்லையென்றால் நடையைக் கட்டுகிறேன் என்று யாரையும் கோபிக்காமல் மிகவும் சாந்தமாக இருந்தது அதன் பார்வை.. உள்ளே சென்று சாப்பாடு இருக்கிறதா என்றேன். இல்லை சமோசாதான் இருக்கிறது என்றான்.மணி ஒன்றுதானே ஆகிறது.அதற்குள் தீர்ந்து விட்டதா என்று எண்ணியவாறே அவனிடம் எதுவும் கேட்கவும் விரும்பாமல் என் வீட்டில் சாப்பிடுவதை நினைத்துக் கொண்டேன்.மதிய வேளையில் அம்மா ஊற்றும் சாம்பாரையும் அதனுடன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவதும்... இங்கு எனக்கு சமோசா இருக்கிறது என்கிறான். அதெல்லாம் எம்மாத்திரமடா.. வாசலை அடைந்தபோது அந்த பசு அந்த இடத்தை விட்டு அசையாமல் கண்கள் கூட அதே நிலையில் சிலையோ என்று எண்ணும் விதம் அப்படியே நின்று கொண்டிருந்தது. எனக்கு பாவமாக இருந்தது.உனக்கு இங்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காதுடா என்று நினைத்தவாறே அதன் முதுகில் என் விரல்களால் தடவியபோது.... என் மென்மையான விரல்கள் அந்த முரட்டுத் தோலில் பட்டபோது அது சிலிர்த்துக் கொண்டதா இல்லை.. எனைத் தொந்தரவு செய்யாதே என்று தோலை சிலுப்பிக் கொண்டதா தெரியவில்லை..அப்பொழுதும் கூட அது என்னைக் கண்களை மட்டும் கூட திருப்பி பார்க்கவில்லை.இறங்கி வெளியில் வந்தேன். இவ்வளவு மரங்கள் இருந்தும் இடையில் செடிகள்
மண்டி இருந்தும் அங்கெல்லாம் பசியாற்றிக் கொள்ளாமல் இங்கு வந்து சமோசாவிற்காக நிற்கிறதென்றால்... அடப்பாவமே... எதுவுமே அது சாப்பிடும்படி இல்லையா! அந்த அளவிற்கா மோசமாயிருக்கிறது... நான் அந்த ஆலைக்குள் வேறு சில குறிப்பிட்ட இடங்களைக் கடக்கும்போது தூசுகள் கலந்த ஒரு நெடி(மோசமான நாற்றம் எதுவும் இல்லை) எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. எனக்கும் ஐந்து அறிவையோ இல்லை அந்த பசுவிற்கு ஆறாம் அறிவையோ கொடுத்திருந்தால் நானும் அதுவும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்திருப்போம்..
கொடிய விலங்குகள் என்கிறோம்.. உண்மையிலேயே மிகக் கொடிய விலங்கு மனிதன் தான். காட்டு விலங்குகளுக்கு தற்பாதுகாப்புக்குக் கூறிய நகங்களையும் கொம்பு போன்றவைகளையும் படைத்தவன் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற மிக மிகக் கொடிய ஆயுதத்தைப் படைத்து விட்டான்.அது இருப்பதால்தானே சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். காட்டு மிருகங்களும் கூட "அறிவில்லாததால்" அதன் பசிக்கும் தற்பாதுகாப்புக்கும் மட்டுமே மற்றவற்றைத் தொந்தரவு செய்யும். மனிதன் உள்ளே நுழையும்போது அவற்றில் பலவற்றை வேட்டையாடியிருப்பான். சில முடிந்தமட்டும் எதிர்த்து பின் ஓடி ஒவ்வொன்றாக செத்து விழுந்திருக்கும்.நாம் அறிவும் சிந்திக்கும் தன்மையும் கொண்ட மனிதர்களாயிற்றே.அது நமக்கு தேவையில்லை.
நான் அந்த ஆலையில் இரு வாரங்களுக்கு முன் முதன் முதன் முதலாக நுழையும்போது மரங்களைக் கண்டு வியந்த வியப்பு... ஆகா இவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்களே என்ற பெருமிதம் வெகு சில நாட்களிலேயே ஒழிந்து போனது. நான் நினைத்ததற்கு மாறாக, இங்கு ஒரு ம....ரத்தையும் நடவில்லை.. இருப்பதைப் பிடுங்கி ஊடே தார்ச்சாலைகளையும் ரயில் தளவாடங்களையும் பெரிய கட்டிடங்களையும் எழுப்பி மிகப்பெரிய ஆலையை உருவாக்கியிருந்தார்கள் என்ற உண்மை என் மர மண்டையில் ஏற சில நாட்கள் ஆயின. யோசித்துக் கொண்டே நடக்கையில் பசி ஒருவித களைப்பை உருவாக்கியிருந்தது.தலையில் இருந்த தலைக் கவசமும் கண் கண்ணாடியும், காலின் ஷூக்களும் இன் செய்த சட்டையும் அவஸ்தையாகவே தெரிந்தன. ஏனோ ஊரில் நண்பர்களுடன் வேப்ப மரங்களின் நிழலில் கைலியையும் சட்டையையும் கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடியது நினைவிற்கு வந்தது. எல்லவற்றையும் கழட்டி எறிந்து ஒரு லுங்கியையும் சட்டையையும் போட்டுக் கொண்டு அங்கு பூராவும் சுற்ற வேண்டும் போல் தோன்றியது.அவஸ்தை மேலும் அதிகரிக்க அப்பொழுது கழட்ட முடிந்த தலைக் கவசத்தையும் கண்ணாடியையும் மட்டும் கழட்டிக் கொண்டேன். கண்ணாடியைக் கழட்டியதும் தூரத்தில் அழுக்காய் இருந்த மரங்கள் இன்னும் மங்கலாய்த் தெரியவே மீண்டும் அதை போட்டுக் கொண்டேன்.
உள்ளே சிறிய பூங்காக்களை அமைத்திருந்தார்கள்..சில இடங்களில் செயற்கையாகவும் சில இடங்களில் இயற்கையாகவும்.. சில இடங்களில் இயற்கையாகவே வளர்ந்த மரங்களைச் சுற்றி வேலியிட்டு அதனைப் பூங்காவாக்கியிருந்தார்கள். அதுனூடே இருந்த வெவ்வேறு உயரங்களில் இருந்த புற்களும் சிறிய புதர்களும் அவை இயற்கை என்பதைக் காட்டியது.என் கைகளாலேயே அந்த வேலிகளை பிய்த்து எறிந்து ஓடிவிடுங்கள் ஓடிவிடுங்கள் என்று அந்த மரங்களைப் பார்த்துக் கத்த வேண்டும் போலிருந்தது. செயற்கையாய் அமைத்த பூங்காக்களில் ஒழுங்காய் வெட்டப்பட்டிருந்த புற்களையும் குள்ளமாய் உருண்டையாய் இருந்த செடிகளையும் கண்டபோது குழந்தைகளை அலங்கரித்து ஏதொவொரு அணிவகுப்பிற்கு தயார்படுத்தப்பட்டதைப் போலிருந்தன. என்னை விட சற்று உயர்ந்து வளர்ந்திருந்த சில மரங்கள் வரிசையாய் நின்றது, இளங்குமரிகள் நடன ஒத்திகை முடித்து பார்வையாளர்கள் முன் சற்றே பதற்றத்துடன் நடனத்தைத் துவக்கும் விதமாய் நின்றுகொண்டிருப்பதைப் போலிருந்தது. அவற்றில் மஞ்சள் பூக்களைத் தலையில் சூடி அவற்றை வழி நடத்திக் கொண்டிருந்த முதிர் கன்னிகளும் அடக்கம்.
இப்படியாகப் போகும்போதும் வரும்போதும் என்னுடன் பேசாமலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டே செல்வேன்.. வேதிப் பொருட்களையும் வாயுக்களையும் சுமந்து செல்லும் குழாய்களுக்கிடையிலும் சில இடங்களில் மரத்தின் கிளைகளும் கொடிகளும் புகுந்து அவைகளுடன் உறவாடிக்கொண்டிருந்தன. அந்த இரும்புக் குழாய்களும் கூட தங்களையும் இந்த மரத்தின் கிளைகளாய் பாவித்துக் கொண்டு உயிரோட்டத்துடன் காணப்பட்டது... அவற்றிற்கெல்லாம் உயிர் கொடுத்த அந்த மரங்கள் எந்த உணர்ச்சியும் சலசலப்புமின்றி சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
இப்படியான ஒரு நாளில் சற்று முன்கூட்டியே சென்று விட்டதால் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..காலை வேலையில் மரங்கள் பக்கத்தில் இயற்கையாகவே இருந்த குளுமையைத் தாண்டி அங்கு திரவ நிலையில் சேமித்து வைக்கப் பட்டிருந்த ஆக்சிஜன் டாங்குகள் அந்த இடத்தைக் கடக்கும்போது இன்னும் குளுமையைக் கூட்டின.
அவ்வளவு மரங்கள் இருந்தும் நான் இதுவரையிலும் ஒரு பறவையையோ அதன் குரலையோ கேட்காதது மிகப் பெரிய ஏமாற்றம். அறிவற்றவை என்று நம்மால் அறியப்பட்டவைகள் கூட நினைத்த மாத்திரத்தில் முடிவெடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.தமக்கு ஒவ்வாது என்றதும் உடனடியாய் வேறு இடத்திற்குக் காலி செய்து கொள்கின்றன.
ஒரே ஒரு நாள் சில தட்டான்களை மட்டும் கண்டிருந்தேன். மெதுவாக நடந்தவாறே முடிவாக இருந்த பெரிய சுவரின் பக்கம் நடந்தேன்.அங்கு இருந்த சற்றே உயர்ந்த மரங்கள் மட்டும் சலசலத்து தங்களுக்குள் சம்பாஷனையில் ஈடுப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு சற்றே ஆச்சர்யம் இவை தனிக் கட்சியோ என்று. ஆனால் அவையும் கூட என்னைப் பார்த்ததே ஒழிய எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் தனியாக உலாவுவதைப் பார்த்து விட்டு உடன் பணிபுரியும் நண்பனும் சேர்ந்து கொண்டான்.அவன் அவ்வூரைச் சேர்ந்தவன். அந்த பக்கம் என்ன இருக்கிறது எனக் கேட்டதற்கு ஒன்றும் இல்லை.. இன்னும் ஆலையை விரிவாக்கப் போகிறார்கள் என்றான்.அந்த பக்கம் பார்ப்பது என்ற முடிவில் அங்கு புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த நீரைக் குளிர்விக்கும் நிலையத்தின் (Cooling Tower) ஐந்து அடுக்குக் கட்டிடத்தில் ஏறினோம். முதலில் அதன் உச்சியில் கான்க்ரீட்டால் மறைத்து வடிவமைக்கப் பட்டிருந்த ஐந்து மீட்டருக்கும் அதிகமான ஆரம் கொண்ட, நீரின் வெப்பத்தை இழுத்து மேலே அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த காற்றாடியின் இறக்கைக்குள் மெதுவாக தலையை நுழைத்து அதனைத் தடவிப்பார்த்தேன்.என்னவெல்லாமோ தோன்றியது.திடீரென்று அது சுழல ஆரம்பித்தால் அதன் இறக்கையைப் பற்றிக் கொண்டு நானும் சுழல்வதைப் போலும் இல்லை எனது உடல் இரண்டாகி நீரின் ஆவியோடு ஆவியாய் எனது ஆவியையும் மேலே பறக்க விடுவதுமாய்த் தோன்றியது. வெளியே வந்து பக்கவாட்டில் அடுத்த கட்டிடத்தில் ஏறி ஆலையின் பின்புறம் பார்த்தபோது மலைத்துத்தான் போனேன்.இடதுபுறம் மிகப் பெரிய ஏரி, நீல நிறத்தில் தண்ணீரை தன் முழுதும் நிரப்பிக் கொண்டு ரம்மியமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நீலம்தான் என்று சொல்ல வாய்ப்பளிக்காமல் கண்ணுக்கெட்டிய கடைசி புள்ளியில் பசுமை சற்று மங்கலாகவே தெரிந்தது. தங்களுக்குள் சம்பாஷித்துக் கொண்டிருந்த மரங்கள் இப்பொழுது கலகலவென சிரித்துப் பேசத் துவங்கியிருந்தன. நான் ஏரியைப் பார்ப்பதை கவனித்துவிட்ட அந்த ஒரு மரம் என் மீது பார்வையை சிறிது நேரம் நிறுத்தி திரும்பவும் தன் வேலையைப் பார்க்கத் துவங்கியிருந்தது. கடந்து செல்லும் மங்கையின் கடைக்கண் பார்வை பெற்றுவிட்ட புன்னகையுடன் நான்.
அப்படியே வலதுபுறம் பார்வையைத்திருப்ப அதற்கு நேர் எதிராய் ஆலையின் கழிவுகளை அளவுக்கதிகமாய் ஏராளமான புகைக்கக்கிகள்(புகைப்போக்கிகள் என்பது வீரியத்தைச் சற்று குறைப்பதாய்ப் படுகிறது எனக்கு) கக்கிக் கொண்டிருந்தன. நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிகரிக்க நம் வாழ்நாளை குறைத்துக் கொள்கிறோம்.
இறங்கி வரும்பொழுது ஒரு அரக்கு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று என் கண்ணில் பட்டு விட்டுச் சென்றது. மனிதன்... பசு மாடு... தட்டான்..இவற்றையடுத்து அந்த வனத்தில்(ஆலை தான்)நான் கண்டுகொண்ட நடமாடும் உயிரினம்.. நினைவுக்கு வந்தது.... வண்ணத்துப்பூச்சியையும் கண்களால் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே...வந்து இருக்கையில் அமர்ந்தபோது அரக்கு நிற வண்ணத்துபூச்சி திரும்பவும் என்னைச் சுற்றி சுற்றி வந்தது.முகத்திற்கு அருகே வந்து பறந்து விட்டு சற்று தள்ளி ஒரு சுற்று சுற்றி சென்றது. ஒரு வேளை அந்த மரம் எதாவது சேதி சொல்லி அனுப்பியிருக்குமோ? வாழ்த்து சொல்லியிருக்குமோ? எனக்கு எதற்கு வாழ்த்து?வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன உயிரற்ற பொம்மைகளா? பெரிய இவனாட்டம் உலா வந்து போகிறாய்? போடா... என்று திட்டியிருக்கும்.. ஆனால் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது எதுவும் சொல்லவில்லையே. முகத்தைத் திருப்பிக் கொண்டதே...
நாம்தான் அவைகளைப் புரிந்து கொள்ளவில்லை...அவைகள் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன..உணர்ந்து கொண்டுள்ளன.இல்லையென்றால் இவ்வளவு கொடுமைப் படுத்தும்பொழுதும் அதற்கான கடமைகளைச் செவ்வனே செய்து நமக்கு உதவியாய் இருந்து கொண்டிருக்குமா? ஆறறிவு நமக்கு.. மற்றதற்கெல்லாம் குறைவு என்று நாமாக நிர்ணயித்துக் கொண்டோம்.நல்லவேளை நமக்கிருக்கும் சிந்திக்கும் சக்தி அவற்றிற்கில்லை.இருந்திருந்தால் மனித இனம், மற்ற இனம் என்று போராடி மனித இனமே இருந்திருக்காது இன்று... என்றெல்லாம் சிந்தனை அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் பாடத்தின் ஊடே மரங்களுக்கு மட்டும் வாயிருந்தால் வரலாற்றை அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தான் பள்ளிக்கு வரும்போது நூறு வயதிற்கும் மேல் கணிக்கத்தகும் ஒரு ஆலமரத்தை தினமும் வியந்து பார்ப்பதாயும் சிலாகித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.
அன்று அலுவல் காரணமாக வெளியில் சென்று விட்டு திரும்பி நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்தேன் வாகனத்திற்காக.நேரமாகும் என்பதால் மரங்களின் நிழலில் நடந்து கொண்டு எதிரில் வரும்போது மறித்து ஏறிக்கொள்ளலாம் என நடக்கத் துவங்கினேன். உயிரைக் காக்க கவசம் வேண்டுமோ இல்லையோ..அங்கு மிதக்கும் தூசுகளிடமிருந்து காத்துக் கொள்ள கண்டிப்பாக கவசம் கட்டாயம் வேண்டும் எனத் தோன்றியது.வேலிக்கு அப்பால் இருக்கும் மரங்களுக்கூடாகவும் மண்டிக்கிடக்கும் செடிகளுக்கூடாகவும் புகுந்து செல்ல வேண்டும் போல் இருந்தது.என் பணியிடம் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லாத எனக்கு அதெல்லாம் நடக்காத காரியம்.. வழியில் வேலியின் அருகில் கம்பிகளுக்குள் சிறைப்பட்டு சிரமப்பட்டு வளர்ந்து கொண்டிருந்த சில மரங்கள், இவர்கள் பிடுங்க மட்டுமில்லை சிலவற்றை நட்டதும் தெரிந்தது...உள்ளே ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நடந்ததில் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்து விட்டிருந்தேன்...உள்ளே செல்ல செல்ல தூசுகளும் காற்றில் அதிகம் மிதந்தன.. வேலியின் அருகில் புற்கள் அதிகமிருந்த இடத்தில் ஓரமாக நின்று கொண்டேன்..வெளியிலிருந்து உள்ளே செல்ல செல்ல பொலிவிழந்த மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.அவையாவும் தங்களின் அழகான பொழிவான முகத்தில் கரி பூசி விட்டதனால் முகத்தை யாருக்கும் காட்டாமல் தலையைக் குனிந்தவாறே இருந்தது மிகுந்த வேதனையைத் தந்தது. அவ்வப்போது காற்றில் அசைந்த இலைகளின் ஊடே, தூசுகளையும் கரியையும் உங்களின் மேல் பூசுவதால் எங்களை மன்னியுங்கள்.. எங்கள் மேல் தவறில்லை என்று கெஞ்சுவதும்.. அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்..அவர்களை நிறைவாக்க எங்களை கரியாக்கிக் கொள்கிறோம் என்று மாறி மாறி ஆறுதல் சொல்வதுமான உரையாடல் என் காதில் விழுந்தும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். வேடிக்கை பார்த்தவன் அலைபேசியை எடுத்து வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே என்று மலர விட்டேன். சில நொடிகளில் எங்கிருந்தோ பறந்து எனக்கு சற்று தள்ளி அமர்ந்த வெள்ளைக் கொக்கு ஒன்று தன் நீண்ட மஞ்சள் அலகால் இரையைத் தத்தி தத்தி தேடியது, எனக்கு என் வெள்ளைப் பூக்கள் மலர்ந்த சத்தம் கேட்டு சத்தம் வந்த இடத்தை அது ஆராய்வதாய்ப் பட்டது. அதனுடன் துணையாக இன்னொரு கொக்கும் ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சியும் சேர்ந்து கொண்டது. அட.. நீங்கள் எல்லாம் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா! என்று வாய் திறந்து கேட்கவேண்டும் போல் இருந்தது.. நல்ல வேளை.. நம்மை விட அறிவு குறைந்தவைகளாக அவற்றின் அனுமதியின்றி நம்மால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட எவற்றின் மொழியும் நமக்கு தெரியவில்லை. இல்லையெனில் மீளவே முடியாத குற்ற உணர்வில் மனிதன் வீழ்ந்திருப்பான்…..
எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே பணியிடம் சென்று சேர்ந்தபோது 50 டன் எடை கொண்ட கம்ப்ரசர் ஒன்று ஒரு பெரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்ந்து வந்ததை சிறிய
மரத்தின் கிளைகள் தடுத்துக் கொண்டிருந்ததால் அந்த கிளைகளை வெட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.. அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டேன்... அதைக் காணச் சகிக்காமலும் மற்றும் என் அலுவலின் ஒரு பணியான தர நிர்ணயத் திட்டம் தயாரித்தலில் அந்த கம்ப்ரசரைப் பற்றியும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்ற நினைப்புடனும்..